டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.


மதுபான கொள்கை வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கிய நிலையில் சிறையிலிருந்த வந்த அவருக்கு, கொட்டும் மழையிலும் , அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


அப்போது அவர் பேசியதாவது ...


திகார் சிறையில் இருந்து விடுதலையான பிறகு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், "என் வாழ்க்கையில் நான் பல கஷ்டங்களை சந்தித்திருக்கிறேன்.  ஆனால், கடவுள் ஒவ்வொரு அடியிலும் என்னை ஆதரித்தார். இந்த முறையும் கடவுள் என்னை ஆதரித்தார், ஏனென்றால் நான் நேர்மையாக இருந்தேன்.


"இன்று நான் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளேன், எனது தைரியம் 100 மடங்கு அதிகரித்துள்ளது என்று கூற விரும்புகிறேன்... சிறைச் சுவர்கள், எனது தைரியத்தை பலவீனப்படுத்த முடியாது. எனக்கு சரியான பாதையை தொடர்ந்து காட்ட இறைவனை பிரார்த்திக்கிறேன். நாட்டைப் பலவீனப்படுத்தவும், நாட்டைப் பிளவுபடுத்தவும் முயற்சிக்கும் அனைத்து சக்திகளுக்கும் எதிராக நான் தொடர்ந்து போராடுவேன் என தெரிவித்தார்.


 






மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் (ED) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கடந்த மே மாதம், மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இடைக்கால ஜாமின் நிறைவடைந்ததை தொடர்ந்து ஜூன் 2ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் சரண் அடைந்தார்.


இதையடுத்து, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிணை கேட்டு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே, ED விசாரித்து வந்த அதே மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.


அவருக்கு டெல்லி நீதிமன்றம் மூன்று நாள்களுக்கு சிபிஐ காவல் விதித்தது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அவரை ஐந்து நாள்கள் காவலில் எடுக்க சிபிஐ முதலில் அனுமதி கோரியது. இதையடுத்து சிபிஐ விசாரணை வளையத்திற்குள் கெஜ்ரிவால் சென்றார். இந்நிலையில், உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து, கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.