டெல்லிக்கு செல்லும் ரயிலில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ரயில்வே ஊழியரை சக பயணிகள் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஓடும் ரயிலில் பரபரப்பு சம்பவம்:


பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தாண்டு கொல்கத்தா மருத்துவர் சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது.


இந்த நிலையில், டெல்லிக்கு செல்லும் ரயிலில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 11 வயது சிறுமியை ரயில்வே ஊழியர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட நபரை பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினருடன் இணைந்து மற்ற பயணிகள் அடித்தே கொலை செய்துள்ளனர்.


நேற்று முன்தினம், பீகாரில் இருந்து டெல்லிக்கு ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவானைச் சேர்ந்த ஒரு குடும்பம் பயணம் செய்தது. இரவு 11.30 மணியளவில், குரூப் டி ரயில்வே ஊழியர் பிரசாந்த் குமார், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை தனது இருக்கையில் உட்கார வைத்தார்.


ரயில்வே ஊழியரை அடித்தே கொன்ற பயணிகள்: 


பின்னர், சிறுமியின் தாய் கழிவறைக்கு சென்றபோது, சிறுமியை அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அந்த கழிவறையை விட்டு வெளியே வந்ததும், தாயிடம்  ஓடி வந்து அந்த சிறுமி கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தார்.


தனது தாயை வாஷ்ரூமுக்கு அழைத்துச் சென்று நடந்ததைச் சொல்லி இருக்கிறார். பின்னர், ரயிலில் இருந்த எம்1  பெட்டியில் இருந்த தனது கணவர், மாமனார் மற்றும் பிற பயணிகளிடம் தாய் இதுகுறித்து கூறி இருக்கிறார். ரயில் லக்னோவில் உள்ள ஐஷ்பாக் சந்திப்பை அடைந்தபோது கோபமடைந்த பயணிகள் மற்றும் குடும்பத்தினர் ரயில் ஊழியர் குமாரை பிடித்து, கோச்சின் கதவுகளுக்கு அருகிலுள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று, ரயில் கான்பூர் சென்ட்ரல் அடையும் வரை தாக்கியுள்ளனர்.


நேற்று அதிகாலை 4.35 மணியளவில் ரயில் கான்பூர் சென்ட்ரலில் அடைந்தபோது, ​​அரசு ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி) அதிகாரிகள் குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.


சிறுமியின் குடும்பத்தினர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்த நிலையில், குமாரின் குடும்பத்தினர் கொலை புகார் அளித்துள்ளனர்.