Flight Ticket Price Hike : இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான Go Frist திவாலானதாக அறிவித்ததை அடுத்து, விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோ ஃபர்ஸ்ட்


வாடியா குழுமத்திற்குச் சொந்தமான கோ ஃபர்ஸ்ட் (Go First) சுமார் 53 விமானங்களை கொண்டு இந்தியாவில் சுமார் 34 இடங்களுக்கு போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது. நாள்தோறும் சராசரியாக 200-க்கும் மேற்பட்ட விமான பயணங்களை மேற்கொண்டு வருகிறது கோ ஃபர்ஸ்ட். இந்நிலையில், கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் திவால் நிலைக்கு உள்ளாக்கி இருக்கிறது.


அமெரிக்காவில் பிடபிள்யூ என்றழைக்கப்படும் பிராட் அண்ட் விட்னி நிறுவனத்திடம் இருந்து விமான இன்ஜின்கள் முறையாக விநியோகிக்கப்படாததால் விமான சேவையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது கோ ஃபர்ஸ்ட். இதனால் 50 சதவீத இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், மாற்று இன்ஜின்கள் வழங்குவதில் பிடபிள்யூ நிறுவனம் தாமதம் செய்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் 13 விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. 


கட்டணம் உயர்வு


இதனையொட்டி, மே 3 முதல் மே 5 வரை மூன்று நாட்களுக்கு அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  டிக்கெட் விற்பனையை மே 15 வரை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கோ ஃபர்ஸ்ட் விமானங்கள் இயங்கி வந்த வழித்தடங்களில் விமான கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. அதன்படி, மே 3ஆம் தேதிக்கான  டெல்லி முதல் மும்பை வரையிலான விமான கட்டணம் 37 சதவீதத்திற்கு அதிகமாக உயர்ந்துள்ளது. இதுபோன்ற பல வழித்தடங்களில் விமான கட்டணம் 4 முதல் 6 மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது வழக்கமான டிக்கெட் விலையை விட ரூ.10,000 உயர்ந்துள்ளது. 


மேலும், மே 5 கட்டண தரவுகளின்படி, 



  • டெல்லி-லே வழித்தடத்தின் வழக்கமான கட்டணம் ரூ.4,772 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.26,819 ஆக உயர்ந்துள்ளது.

  • சண்டிகர்-ஸ்ரீநகருக்கு வழக்கமான கட்டணம் ரூ.4,745 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.26,148 ஆக உயர்ந்துள்ளது.

  • ஸ்ரீநகர்-சண்டிகருக்கு வழக்கமான கட்டணம் ரூ.4,047 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.24,418 ஆக உயர்ந்துள்ளது.

  • மும்பை-லக்னோவுக்கு வழக்கமான கட்டணம் ரூ.4,046 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.20,934 ஆக உயர்ந்துள்ளது.

  • ஸ்ரீநகர்-சத்தீஸ்கருக்கு வழக்கமான கட்டணம் ரூ.4,772ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.26,819 ஆக உயர்ந்துள்ளது.


இப்படி இருந்த கட்டணங்கள் தற்போது அதிகரித்துள்ளது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை கோடை விடுமுறையாலும், கோ ஃபர்ஸ்ட் விமான சேவை முடக்கதாலும் உயர்ந்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த விலை அடுத்த மாதம் வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.