லடாக்கில் ராணுவ வீரர்கள் பயிற்சி வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த விபத்து நேற்று இரவு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உள்ள தௌலத் பேக் ஓல்டி பகுதியில் 5 ராணுவ வீரர்கள் டி-72 டேங்க் வாகனத்தை கொண்டு ஆற்றை கடக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வாகனம் ஆற்றில் கவிழ்ந்து அடித்து செல்லப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல்களும் இன்று காலை முதல் மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.






நீண்ட போராட்டத்துக்குப் பின் 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாகனம் கவிழ்ந்து அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், “லடாக்கில் ஆற்றின் குறுக்கே கடக்கும் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் நமது துணிச்சலான இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேர் உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த வருத்தம் கொள்கிறேன். தேசத்திற்கு நமது துணிச்சலான வீரர்கள் அளித்த முன்மாதிரியான சேவையை ஒருபோதும் மறக்க மாட்டோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துக்க நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது” என தெரிவித்துள்ளார்.