PM Modi: குஜராத்தில் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு, பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.


குஜராத்தில் பிரதமர் மோடி:


ஜார்கண்ட் மாநில சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு,  தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்றடைந்தார். அகமதாபாத்தில் வைத்து அவருக்கு, பாஜக சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின், அவர் குஜராத் செல்வது இதுவே முதல்முறையாகும். நாளை அவரது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட, அகமதாபாத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, சுமார் 8000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.


நாட்டின் முதல் வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவை:


பிரதமர் நரேந்திர மோடி இன்று, புஜ் மற்றும் அகமதாபாத் இடையே நாட்டின் முதல் 'வந்தே மெட்ரோ' ரயில் சேவையை தொடங்கிவைக்கிறார். இரு நகரங்களுக்கு இடையேயான 360 கிமீ தூரத்தை, இந்த ரயில் 5 மணி நேரம் 45 நிமிடத்தில் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 110 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்த ரயில். வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயிலில், தகவல்களுக்கான எல்சிடி ஸ்க்ரீன், சிசிடிவி கேமரா, மொபைல் சார்ஜிங் போர்ட் மற்றும் ஏச் போன்ற வசதிகள் உள்ளன. 8 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் ஆயிரத்து 150 பேர் அமர்ந்தபடியும், இரண்டாயிரத்து 58 பேர் நின்றபடியும் பயணிக்கலாம்.


மெட்ரோ ரயில் சேவைகள்


நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கான வந்தே பாரத் ரயில்களையும், காந்திநகரில் மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதன்படி, கோலாப்பூர்-புனே, புனே-ஹூப்ளி, நாக்பூர்-செகந்திராபாத், ஆக்ரா கான்ட் முதல் பனாரஸ் மற்றும் துர்கா முதல் விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் முதல் 20 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் வாரணாசி மற்றும் டெல்லி இடையே இயக்கப்படும். 


ரூ.8000 கோடி மதிப்பிலான திட்டங்கள்:


காந்திநகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு சந்திப்பு மற்றும் எக்ஸ்போ 2024 , பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அகமதாபாத்தில் ரூ.8,000 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். எரிசக்தி, சாலைகள், வீட்டு வசதி துறை உள்ளிட்ட திட்ட பணிகள் இதில் அடங்கும்.


கட்ச் லிக்னைட் அனல் மின் நிலையம், கட்ச்சில் 30 மெகாவாட் சோலார் சிஸ்டம், 35 மெகாவாட் அடிப்படை சோலார் பிவி திட்டம் மற்றும் மோர்பி மற்றும் ராஜ்கோட்டில் மின் துணை மின் நிலையங்களையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.