கடந்த இரண்டு மாதங்களாக மணிப்பூரில் இனக்கலவரமும் போராட்டமும் தொடர்ந்து வருகிறது. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எதுவும் பயன் தந்ததாக தெரியவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது.
மணிப்பூரில் தொடரும் வன்முறை சம்பவங்கள்:
மாநில காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ராணுவம் அனுப்பப்பட்டது. இந்த சூழ்நிலையில், எல்லை பகுதியான மேற்கு இம்பால் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் ஆயுதம் ஏந்திய கலவரக்காரர்கள், இந்திய ராணுவத்தினர் ஆகியோருக்கிடையே மோதல் வெடித்தது.
அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "குக்கி கிராமமான ஹராத்தோலில் தாக்குதல் நடந்தது. இதை தொடர்ந்து, அதிகாலை 5.30 மணியளவில் கலவரக்காரர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். பதிலுக்கு அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
துப்பாக்கிச்சூட்டால் மீண்டும் உச்சக்கட்ட பதற்றம்:
சம்பவ இடத்திற்கு செல்லும் போது, ஆயுதமேந்திய கலகக்காரர்கள், எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் சேதத்தை தடுக்க ராணுவம் சார்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவத்தினரின் துரித நடவடிக்கையால் துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டது. கூடுதல் படைகள் சம்பவ பகுதிக்கு அனுப்பப்பட்டன. சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன" என்றார்.
காலை 9 மணி வரை நீடித்த கடுமையான துப்பாக்கிச் சூட்டில், மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்ற அதேநாள் இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு ராகுல் காந்தி சென்ற போது, அவரின் கான்வான் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது. இன்று முன்னதாக இம்பாலுக்கு விமானம் மூலம் சென்ற ராகுல் காந்தி, சுராசந்த்பூருக்குச் செல்லும் வழியில் அங்கிருக்கும் ராணுவ முகாம்களில் மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.
அப்போது, ராகுல் காந்தியின் கான்வாய் தடுத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் பேசுகையில், "பாதுகாப்பு காரணங்களுக்காக இம்பாலில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விஷ்ணுபூரில் ராகுல் காந்தியின் கான்வாய் நிறுத்தப்பட்டது. சாலை வழியாக சுராசந்த்பூர் வரை பயணம் செய்வதற்கு பதிலாக ஹெலிகாப்டரில் செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனவே முன்னெச்சரிக்கையாக, கான்வாயை விஷ்ணுபூரில் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டோம்" என்றார்.
இந்த ஆண்டு மே மாதம் இனக்கலவரம் தொடங்கியதில் இருந்து சுமார் 50,000 பேர் இப்போது மாநிலம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.