நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பழங்குடி இளைஞர்களுக்கு மதிப்புமிக்க மார்க் ஷாண்ட் விருது அளிக்கப்பட்டுள்ளது. பெட்டா குரும்பா பழங்குடி சமூகத்தை சேர்ந்த ரமேஷ் மாறன் (32), விஷ்ணு வர்தன் (29) ஆகியோருக்கு இங்கிலாந்து மன்னரும் மகாராணியும் நேற்று விருதினை அளித்து சிறப்பித்துள்ளனர்.


இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்த தமிழ்நாட்டு பழங்குடி இளைஞர்கள்:


லந்தனா கேமரா என்ற தாவர இனத்தில் இருந்து முழு உருவ யானை சிலைகளை உள்நாட்டு கைவினை கலைஞர்கள் செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் கெளரவிக்கும் விதமாக ரமேஷ், விஷ்ணு ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ குறிப்பிடுகையில், "மாநிலத்தின் பழங்குடியினருக்கு இத்தகைய அங்கீகாரம் கிடைத்ததைக் கண்டு தமிழ்நாடு அரசு மகிழ்ச்சி அடைகிறது. மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான பழங்கால பந்தம் பரவலாகக் கொண்டாடப்பட வேண்டும்.


இந்த பன்முகத் திட்டம் காடுகளில் இருந்து லந்தனா தாவரத்தை அழிக்கிறது. பழங்குடி மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. மேலும், மனித-வனவிலங்குகளின் சகவாழ்வைக் கொண்டாடுகிறது. லந்தனா யானைகள் விரைவில் மாநிலம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு மக்கள் முன் காட்சிக்கு வைக்கப்படும்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


ஆக்கிரமிப்பு தாவரங்களை கொண்டு கைவினை பொருள்கள்:


இந்தியாவில் உள்ள ரியல் எலிஃபண்ட் கலெக்டிவ் என்ற தன்னார்வ நிறுவனம், பிரிட்டன் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து புகழ்பெற்ற 'லந்தனா யானைகளை' தயாரித்து வருகிறது.


சுற்றுச்சூழலில் இருந்து ஆக்கிரமிப்பு உயிரினங்களை அகற்றுவதுடன், இந்த கைவினை பொருள்கள், வனத்தை சார்ந்துள்ள சமூகங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதோடு, மனித-வனவிலங்குகளின் வாழ்வை மேம்படுத்தவும் உதவுகின்றன.


தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள சுமார் 120 பழங்குடியினர், லந்தானா யானைகள் மற்றும் பிற கைவினைப்பொருட்கள் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த திட்டத்தில் பணிபுரிந்து கடந்த 5 ஆண்டுகளில் 3.5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளனர். 


கடந்த 2021 ஆம் ஆண்டு, மத்திய லண்டன் பூங்காவில் 125 லந்தனா யானை சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. மனித-வனவிலங்கு வாழ்வு மேம்பாட்டுக்காக 250க்கும் மேற்பட்ட லந்தனா யானைகள் ஏலம் விடப்பட்டு, நிதி திரட்டப்பட உள்ளது. 


லந்தானா யானை கண்காட்சிகளில் இருந்து திரட்டப்படும் நிதியானது, இந்தியாவில் உள்ள மனித-வனவிலங்குகளின் சகவாழ்வை ஊக்குவிக்கும் திட்டங்களுக்குத் துணைபுரிகிறது. மனித-வனவிலங்கு வாழ்வு குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பயிற்சி வகுப்புகளை எடுக்கவும் இந்த நிதி பயன்படுகிறது.


பெங்களூருவில் உள்ள பல்திறன் பல்கலைக்கழகம், இந்த பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு லந்தனா யானைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரியல் எலிஃபண்ட் கலெக்டிவ் தன்னார்வ நிறுவனம், ரங்தே நிறுவனத்துடன் இணைந்து நீலகிரி யானை நிதியை தொடங்கியுள்ளது. இந்த நிதியின் மூலம் உள்ளூர் கைவினை கலைஞர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.


லந்தனா கமாரா என்பது உலகின் ஆபத்தான 10 ஆக்கிரமிப்பு தாவரங்களில் ஒன்றாகும். இதனால், நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் பெரிதும் பயன் அடையும்.