ஆந்திர மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று விசாகப்பட்டினம். இந்த நகரத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த நகரத்தில், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் கழகத்திற்கு சொந்தமான எண்ணெய் சுத்தகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ஆலையில் சில மணிநேரங்களுக்கு முன்பு திடீரென பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள மூன்றாவது யூனிட்டில்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தற்போது வரை 5 தீயணைப்பு வாகனங்கள் ஆலையில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் முயற்சியிலும், தீ பிற இடங்களுக்கு பரவாமல் இருப்பதற்கும் போராடி வருகின்றனர். மேலும், சில தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு சென்று கொண்டிருக்கின்றன.


தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அதே சமயத்தில், தீப்பிடித்த 3-வது யூனிட்டில் தொழிலாளர்கள் பலரும் உள்ளே இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரமான சத்தத்துடன் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அருகில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.