ஒடிசாவில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி, பெண் தாசில்தார்  தனது சகோதரர் திருமணத்தில் டான்ஸ் ஆடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் சுகிந்தா என்ற பகுதியில் தாசில்தாராக பணிபுரிவர் புல்பூல் பெஹெரா. இவர், கடந்த சனிக்கிழமை தனது சகோதரர் திருமண விழாவில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி டான்ஸ் ஆடியுள்ளார். டான்ஸ் ஆடிய காட்சி வீடியோவாக வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, இவர் மீது பலரும் கோபமடைந்தனர்.


திருமண விழாவில் 25 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று நடைமுறையில் உள்ள நிலையில், கொரோனா விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு, முகக்கவசம் அணியாமல் பெஹெரா டான்ஸ் ஆடிய வீடியோவை கண்ட பலர், கொரோனா விதிமுறைகளை மீறி ஒரு அதிகாரி இவ்வாறு நடந்துகொண்டது தவறு என்று பலர் கருத்து கூறினர். இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் சக்ரவர்த்தி சிங் ரத்தோர் கவனத்துக்கு வந்த நிலையில், இதுதொடர்பாக அவர் கூறுகையில், பெஹெரா விடுப்பில் இருந்ததாகவும், அவர் பணிக்கு மீண்டும் திரும்பியதும், இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்று கூறினார்.


மேலும், தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய மாவட்ட ஆட்சியர், காட்டுத்தீ போல் தொற்று பரவும்போது வழிகாட்டுதல்களை மீறியதற்காக யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள் என்று கோபமாக கூறினார்.


மேலும் படிக்க : 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு


கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.


மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அதிகாரி இவ்வாறு பொறுப்பில்லாமல் செயல்பட்டது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நிலைமை மோசமாக இருக்கும் நிலையில், சுப நிகழ்ச்சிகளை எந்த ஆட்டமும், பாட்டமும் இல்லாமல் நடத்துவதையே தற்போதைக்கு அனைவரும் விரும்புகின்றனர். பொதுமக்கள் முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.