கிழக்கு மத்திய வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம். யாஸ் புயலாக நேற்று மாறியது. இந்தப் புயல் மேலும் வலுவடைந்து இன்று இன்று காலை தீவிர புயலானது. இந்நிலையில், இந்தப் புயல் மேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசாவின் பாரதீப் மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய சாகர் தீவுகள் இடையே அதி தீவிர புயலாக நாளை நண்பகல் கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புயல் அதி தீவிர புயலாக மாறுவதால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மஞ்சள் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது.
யாஸ் புயலின் காரணமாக ஒடிசாவின் கேந்திராபாரா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்திய விமானப்படை, 15 விமானங்களில் 950 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், 16 விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள் உடனடி தேவைக்காகவும், கிழக்குக் கடற்படை மற்றும் அந்தமான் நிக்கோபார் கடற்படையைச் சேர்ந்த 8 கப்பல்கள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காகவும் தயார் நிலையில் உள்ளன.
இந்தப் புயலுக்கு ஓமன் நாடு கொடுத்த 'யாஸ்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு டவ்தே புயலுக்கு பிறகு வரும் இரண்டாவது புயல் யாஸ் ஆகும். மேலும் வங்கக்கடலில் உருவான முதல் புயல் இதுவாகும். முன்னதாக, யாஸ் புயலின் காரணமாக நாகர்கோவில் - ஷாலிமார் சிறப்பு ரயில் மே 23 வரை, ஷாலிமார் - நாகர்கோவில் சிறப்பு ரயில் மே 26 வரை, ஹவுரா - கன்னியாகுமரி சிறப்பு ரயில் மே 24 வரை, ஹவுரா - சென்னை சிறப்பு ரயில் மே 24 முதல் மே 26 வரை, சென்னை - ஹவுரா சிறப்பு ரயில் மே24 முதல் மே 26 வரை, ஷாலிமார் - திருவனந்தபுரம் மே 25 வரை, எர்ணாகுளம் - பாட்னா மே 24 முதல் மே 25 வரை, பாட்னா- எர்ணாகுளம் மே 27 முதல் மே 28 வரை, திருச்சி - ஹவுரா மே 25 வரை, ஹவுரா - திருச்சி மே 27 வரை உள்ளிட்ட 22 சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இரு மாநிலங்களில் பெரிய அளவிலான பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மீட்பு பணிகளை மாநில அரசுகள் துவங்கியுள்ளன. அதிவேக புயல் என்பதால் மீனவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.