ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், எதிரி கட்சியாக கருதப்படும் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
புவிசார் அரசியல் ரீதியாக ஜம்மு காஷ்மீர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக பார்க்கப்படுகிறது. இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே முக்கிய பிரச்னையாக காஷ்மீர்தான் இருக்கிறது. ஜம்மு காஷ்மீர், தங்களுக்கு சொந்தமான இடம் என பாகிஸ்தான் கூறி வருகிறது. இதற்கு, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க போவது யார்?
இந்த சூழலில், 10 ஆண்டுகளுக்கு பிறகு, ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடந்தது. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர், இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் அக்டோபர் 1ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்தது.
நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா மனம் திறந்து பேசியுள்ளார். பாஜகவை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
எதிரி கட்சியுடன் கைகோர்க்கும் பரூக் அப்துல்லா:
இதுகுறித்து அவர் கூறுகையில், "நாம் அனைவரும் ஒரே விஷயத்திற்காக உழைத்தால், மாநில மக்களின் நிலை மேம்பட வேண்டும். தேர்தலில் போட்டியிடலாம். ஆனால், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
இந்த தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி அதிகப்படியான இடங்களில் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
குறிப்பாக, India Today - C Voter எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி 40 முதல் 48 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. பாஜக 27 முதல் 32 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஜனநாயக கட்சி 6 முதல் 12 இடங்களில் ஜெயிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.