சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் சப்போரா என்ற கிராமம் இருக்கிறது. இங்கு, இரண்டு வாரங்களுக்கு முன்பு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளை என்ற பெயரில் வங்கி திறக்கப்பட்டிருக்கிறது . இதையறிந்த , சப்போரா கிராம மக்கள், வங்கி சேவைகள் தொடர்பாக மிக நீண்ட தூரம் செல்ல தேவையில்லை என மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.  ஆனால், தற்போது போலியான வங்கி , எஸ்.பி.ஐ பெயரில் நடத்தி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


போலியான வங்கி கண்டறியப்பட்டது எப்படி?


சப்போரா கிரமத்தைச் சேர்ந்த அஜய் அகர்வால் என்பவர், தனது கிராமத்திற்கு வங்கி கிளையை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்திருக்கிறார். ஆனால், இந்த வங்கி கிளை அமைந்தது அவருக்கே தெரியவில்லை. இதையடுத்து, வங்கி அதிகாரிகளிடமே சென்று , இதுகுறித்து கேட்டப்போது, அவருக்கு சந்தேகம் எழுந்தது. 


இதையடுத்து, அருகில் உள்ள தப்ரா வங்கி கிளை மேலாளரிடம் கேட்டிருக்கிறார். ஆனால், அவருக்கும் இதுகுறித்து தெரியவில்லை. மேலும், தமக்கு தெரியாமல், எப்படி வங்கி கிளை தொடங்கப்பட்டது என அவருக்கும் சந்தேகம் எழுந்தது.  பின்னர், இதுகுறித்து ஸ்டேட் வங்கி உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்தபோது, அவர்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அடுத்த நாளே, காவல்துறையினருடன் வந்து சோதனை நடத்தியதில், போலியான வங்கியானது அனைவருக்கும் தெரியவந்தது. 


புகார்:


இந்நிலையில், வங்கியின் மேலாளர் என்று அழைக்கப்படும் பங்கஜ் சாஹீ தலைமறைவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 


இதையடுத்து, கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி ஸ்டேட்  பேங்க் ஆஃப் இந்தியா சார்பில், புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து அனிஸ் பாஸ்கர் என்ற நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும், சுமார் 8 பேரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. 


போலியான வங்கி:






இந்த போலியான வங்கியானது , கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி திறக்கட்டிருக்கிறது.  ரூ. 7000க்கு வாடகை கட்டடத்தில் எடுத்து நடத்தப்பட்டு வந்திருக்கிறது.  இந்த வங்கியில் 6 பேர் வேலை செய்து வந்ததாகவும், அவர்களுக்கும் போலியான வேலை நியமன ஆணைகளும் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
இது குறித்து , அங்கு வேலை செய்தவர்கள் தெரிவிக்கையில், போலியான வங்கி என்பது எங்களுக்கே அதிர்ச்சியாக உள்ளது என்றும், வேலைக்காக ரூ. 6 லட்சம் வரை பணம் கொடுத்ததாகவும் தெரிவிக்கின்றனர்.


இதில் மேலாளராக இருந்தவர் தலைமறையாகியுள்ளார். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனில் பாஸ்கர் , பல மோசடி வழக்கிலும் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர் ரயில்வே துறையிலும் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியுள்ள புகாரும் உள்ளது. 


நல்ல வேளையாக , வங்கி தொடங்கப்பட்டு 2 வாரங்களுக்குள் போலியானது என கண்டறியப்பட்டதால், மக்கள் யாரும் அதற்குள் பணம் டெபாசிட் செய்யவில்லை என்ற தகவல் தெரிவிக்கின்றன.  காலம் தாழ்த்தப்பட்டிருந்தால், சாமானியர்கள் பலர் ஏமாற்றப்பட்டிருக்கிலாம். இந்த சம்பவமானது, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.