டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக போலீசாரின் தடுப்பான்களை உடைத்தெறிந்து விட்டு விவசாயிகள் முன்னேறி உள்ளனர். 


டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் 2 வார காலமாக நீடித்து வருகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரம் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கிய நிலையில், 3 மாதங்களுக்கு பின்னர், மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதியில் இருந்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


சமீபத்தில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்பட்டது. இதனால், மல்யுத்த வீராங்கனையின் சகோதரர் உட்பட 2 பேர் பலத்த காயமடைந்தனர் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை டெல்லி போலீசார் மறுத்தனர்.உச்ச நீதிமன்றத்தில், மல்யுத்த வீராங்கனைகள் 3 பேர் தொடுத்த வழக்கு விசாரணையில், 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளன. புகார் அளித்த 7 பேருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என கூறி, அந்த வழக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் முடித்து வைக்கப்பட்டது.


போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் உச்ச நீதிமன்ற உத்தரவை தாங்கள் மதிப்பதாகவும், போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர். மூத்த வீரர்களிடம் கலந்து ஆலோசனை செய்து விட்டு வருங்கால நடவடிக்கைகளை பற்றி முடிவு செய்வோம் எனவும் அவர்கள் கூறினர். இதுதவிர, கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தியும் டெல்லி, ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.


இந்நிலையில், அரியானா, பஞ்சாப், டெல்லி மற்றும் உத்திர பிரதேசம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் அணி, அணியாக திரண்டு டெல்லிக்கு படையெடுத்தனர். சம்யுக்த கிசான் மோர்ச்சா விவசாய சங்கத்தின் கீழ் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகள் ஒன்று திரண்டுள்ளனர். இது பற்றி கூறிய போலீசார், விவசாயிகளின் ஒரு பிரிவினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு சென்றனர். தடுப்பான்கள் அமைத்த நுழைவு பகுதியில், அவசர அவசரத்துடன் சென்ற அவர்களில் சிலர் தர்ணா போராட்ட பகுதிக்கு செல்வதற்காக தடுப்பான்கள் மீது ஏறினர். இதில் தடுப்பான்கள் கீழே விழுந்தன. இதனால், அவர்கள் அதனை தூக்கி, வீசி விட்டு முன்னேறி சென்றனர். அமைதியை காக்கும்படியும், சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொள்ளும்படியும் பொதுமக்களிடம் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 


மேலும் படிக்க 


TN Weather Update: வங்கக்கடலில் 10ம் தேதி உருவாகிறது புதிய புயல் - காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாக அறிவிப்பு