Farmers Protest: டெல்லியை நோக்கி செல்லும் தங்களது போராட்டம் நாளை தொடரும் என,  விவசாய சங்கங்கள் அற்வித்துள்ளன.


விவசாயிகளின் போராட்டமும், கோரிக்கைகளும்:


பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு வாரமாக மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியை முற்றுகையிடும் நோக்கில், பஞ்சாப் மற்றும் ஹரியான எல்லைகளில் விவசாயிகள் குவிந்துள்ளனர். போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் சேர்ந்து, விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைவதை தொடர்ந்து தடுத்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட மோதலில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த சிலர் படுகாயமடைந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் தான், விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசு இடையேயான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்றது.


குறைந்தபட்ச ஆதார விலைக்கான பரிந்துரை:


சண்டிகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சார்பில் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா உள்ளிட்டோரும், எதிர்தரப்பில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் பங்கேற்றார். அதில், பஞ்சாப் விவசாயிகளிடமிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையில் (MSP) பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை வாங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு தரப்பு பரிந்துரைத்தது. இதற்கு சம்மதம் தெரிவித்தால் என்.சி.சி.எஃப் (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) மற்றும் NAFED (இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு) போன்ற கூட்டுறவு சங்கங்கள், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் மக்காச்சோளத்தை பயிரிடும் விவசாயிகளுடன் குறைந்தபட்ச ஆதார விலையில் பயிரை வாங்க ஒப்பந்தம் செய்யும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.


பரிந்துரையை நிராகரித்த விவசாய சங்கங்கள்:


குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான, மத்திய அரசின் பரிந்துரை தொடர்பாக கலந்தாலோசித்து இரண்டு நாட்கள் முடிவை தெரிவிப்பதாக விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதோடு, இந்த காலகட்டத்திலேயே தங்களது மற்ற கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில், “ மத்திய அரசின் பரிந்துரைகள் தொடர்பாக கலந்தாலோசித்ததில், அந்த திட்டம் விவசாயிகளின் நலன்களுக்கானது இல்லை என்பது தெரியவந்துள்ளது.  இதனால், நாளை (புதன் கிழமை) டெல்லி நோக்கி பேரணியாக செல்லும் போராட்டம் தொடரும்” என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.


டெல்லிய நோக்கி போராட்டம்:


இதுதொடர்பாக பேசிய விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ஜக்ஜித் சிங், “ மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிற்கு பாமாயிலை இறக்குமதி செய்கிறது, இதனால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படுகிறது. இந்த பணத்தை எண்ணெய் வித்து பயிர்களை பயிரிட நாட்டின் விவசாயிகளுக்கு வழங்கி, குறந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்து நடவடிக்கை எடுத்தால்,  குறைந்த விலையில் எண்ணெய் வித்துகள் கிடைக்கும்” என்றார். மற்றொரு விவசாய சங்க தலைவரான சர்வான் சிங் பாந்தர் கூறும்போது, ஒன்று எங்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள் அல்லது தடுப்பான்களை நீக்கி விட்டு, அமைதியாக போராடுவதற்காக டெல்லி செல்ல எங்களை அனுமதியுங்கள் என கூறியுள்ளார்.