Farmers Protest: டெல்லியை நோக்கி செல்லும் போராட்டம் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக, விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
விவசாயிகள் போராட்டம்:
கடந்த 2021-22ம் ஆண்டு போராட்டத்தின் முடிவின் போது மத்திய அரசு கொடுத்த, குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்று வரும் அவர்களை, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தடுப்புகளை கொண்டு ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், இரண்டு தரப்புக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. கண்ணிர் புகை குண்டு வீசுவது போன்ற சம்பவங்களும் தொடர்கதையாகி வருகிறது. இதில், ஏற்கனவே பலர் படுகாயமடைந்துள்ளனர்.
விவசாயி சுட்டுக்கொலை:
இந்த நிலையில் தான், ஹரியானா மாநிலம் கானௌரி எல்லையில் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் தடுக்க முயன்ற போலீசார் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். போலீஸ் நடவடிக்கையின் போது தான் அவர் இறந்துவிட்டார் என்று அகில இந்திய கிசான் சபா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், அதை ஹரியானா போலீசார் மறுத்துள்ளனர். விவசாயி உயிரிழந்த நிலையில், எல்லையில் அமர்ந்து தொடர்ந்து போராடுவோம் என்றும், டெல்லியை நோக்கி செல்லும் போராட்டம் இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் சொல்வது என்ன?
இதுதொடர்பாக பேசியுள்ள பாட்டியாலாவைச் சேர்ந்த மருத்துவர், “கனௌரியில் இருந்து மூன்று நோயாளிகள் எங்களிடம் வந்துள்ளனர். அவர்களில் சுப் கரண் சிங் வரும் வழியிலேயே இறந்துவிட்டார். மற்ற இருவரின் உடல்நிலை சீராக உள்ளது. உயிரிழந்தவரின் தலையில் குண்டு காயம் உள்ளது. தோட்டாவின் அளவு போன்ற கூடுதல் விவரங்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் உறுதிப்படுத்தப்படும்” என கூறியுள்ளார். எல்லையில் உள்ள தடுப்புகளை உடைக்கும் முயற்சியை முறியடிப்பதற்காக, விவசாயிகள் மீது ஹரியானா காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. அப்போது தான் அந்த விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
விவசாயிகள் ஆவேசம்:
விவசாயி யாரும் உயிரிழக்கவில்லை என ஹரியானா மாநில காவல்துறை விளக்கமளித்துள்ளது. ஆனால், விவசாயியின் உயிரிழப்பை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த மான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விவசாய சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சுப் கரண் சிங்கின் மரணம் "போலீஸ் நடவடிக்கையின் நேரடி விளைவு" . இந்த கொலை, விவசாயிகளுக்கு நட்பானது எனக் கூறிக்கொள்ளும், மோடி ஆட்சியின் கொடூரத்தை அம்பலப்படுத்துகிறது. ஹரியானாவில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு, டெல்லி நோக்கி அணிவகுத்துச் செல்லும், எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை, எதிரி ராணுவ வீரர்கள் போல் நடத்தி, போரை நடத்தி வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.