கொரோனா ஊரடங்கினால் புலம்பெயர் தொழிலாளர்களை விமானத்தில் அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைத்த விவசாயி பப்பன் சிங் கெலாட் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விமானப் பயணம்


கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா நெருக்கடியின் போது தனது தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலமான பீகாருக்கு தன் சொந்த செலவில் விமானத்தில் அனுப்பி வைத்து கவனம் ஈர்த்தவர் காளான் விவசாயி பப்பன் சிங் கெலாட். 


இவர் நேற்று (ஆக.24) டெல்லியில் உள்ள ஒரு கோயிலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.


டெல்லி அலிப்பூரில் இவரது வீடு உள்ள நிலையில், தன் வீட்டுக்கு முன்புறம் உள்ள கோயிலில் தூக்கில் தொங்கியபடி இவர் கண்டெடுக்கப்பட்டதாக டெல்லி காவல் துறையினர் முன்னதாகத் தெரிவித்தனர்.


இந்நிலையில், இவர் தூக்கிட்டு உயிரிழந்த இடத்தில் இருந்து தற்கொலைக் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் தன் உடல்நலப் பிரச்சினை காரணமாக தான் தற்கொலை செய்து கொள்வதாக பப்பன் சிங் கெஹ்லோட் எழுதி வைத்து விட்டு உயிரிழந்துள்ளார்.


கெலாட்டின் உடலை உடற்கூராய்வுக்காக காவல் துறையினர் அனுப்பியுள்ள நிலையில், மேற்கொண்டு இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


நாடு முழுவதும் கவனம் ஈர்த்த பப்பன் சிங்


கொரோனா ஊரடங்கின்போது நாடு முழுவதும் ஒரு புறம் உயிரிழப்புகள் அதிகரித்த நேரம், கீழ்த்தட்டு மக்கள் குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் இன்னல்களை சந்தித்ததனர்.


பலரது தொழில்களும் முடங்கிய நிலையில், தன்னலம் கருதாது தன்னிடம் பணிபுரிந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊரான பீகாருக்கு டெல்லியில் இருந்து விமானத்தில் அனுப்பிவைத்து பலரது உள்ளங்களையும் கொள்ளைகொண்டார் விவசாயி பப்பன் சிங் கெலாட்.


 






அதோடு நிறுத்தாமல், கொரோனா லாக் டவுன் முடிவுக்கு வந்த பிறகு தொழிலாளர்கள் மீண்டும் டெல்லி திரும்பவும் டிக்கெட்டுகளுக்கு செலவு செய்து உதவி முன்னுதாரண மனிதராக விளங்கினார்.


கடும் நெருக்கடியின்போது ஏராளமான மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிய பப்பன் சிங் தற்கொலை செய்து உயிரிழந்துள்ள நிலையில், அவரது செயல்களை இணையத்தில் நினைவுகூறி வருகிறார்கள்.




கடந்த 5 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழ்நாடும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இருந்து வருகின்றது.


குறிப்பாக தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி, திருவள்ளூர் மாணவி சரளா ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் அதிர வைத்தன. 


எந்த ஒரு பிரச்சினைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.









சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050