பிரதமர் மோடி எங்களிடம் மன்னிப்பு கேட்பதை நாங்கள் விரும்பவில்லை எனவும் அது வெளிநாட்டில் அவருக்கு இருக்கும் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திவிடும் எனவும் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிகெய்ட் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடும் வெயில், குளிர், மழை என்று பாராமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் உண்ணாவிரத போராட்டமும் மேற்கொண்டனர். பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து தற்போது அதில் வெற்றியையும் பெற்றுள்ளனர் விவசாயிகள்.
இதில் ஏராளமான விவசாயிகள் தங்கள் உயிரை இழந்தனர். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டங்களை பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில்தான் மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 19ஆம் தேதி அறிவித்தார். அதன்படி, சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதா தக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகெய்ட் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மன்னிப்பு கேட்பதை நாங்கள் விரும்பவில்லை. வெளிநாட்டில் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டால் விவசாயிகள் சம்மதம் இல்லாமல் நடக்காது. நாங்கள் நேர்மையாக வயல்களில் விவசாயம் செய்கிறோம், ஆனால் டெல்லி எங்கள் கோரிக்கைகளை கவனிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே “சில காரணங்களால் வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்ததில் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், அடுத்துவரும் காலங்களில் முன்னெடுப்போம்” என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருந்தார். ஆனால் மத்திய அரசு வேளாண் சட்டங்களை வேறு வடிவில் கொண்டுவர திட்டமிடுகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இந்நிலையில், வேளாண் சட்டங்களை எந்த வடிவிலும் மீண்டும் கொண்டுவரும் திட்டம் ஏதும் இல்லை. காங்கிரஸ் கட்சி உருவாக்கும் குழப்பத்தில் விவசாயிகள் யாரும் சிக்கிட வேண்டாம் என்று நரேந்திர சிங் தோமர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்