கடந்த பிப்ரவரி 26ம் தேதி பெங்களூரை அடுத்த ராஜாஜிநகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் உள்ள சோதனைச் சாவடியில், தலையில் பெரிய சாக்கு மூட்டையுடன் ஒரு விவசாயி வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த அதிகாரி ஒருவர் விவசாயியை தடுத்து நிறுத்தியுள்ளார்.
மேலும், அந்த விவசாயிடம் டிக்கெட் இருந்தபோதிலும் நடைமேடைக்குள் நுழைய அந்த அதிகாரி அனுமதிக்கவில்லை. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வைரலான வீடியோ:
அந்த நேரத்தில் அங்கிருந்த பயணிகள் சிலர் மெட்ரோ ரயிலில் பயணிகளுக்கான ஆடைக் குறியீடு உள்ளதா என்றும், விஐபிகளுக்கு மட்டும் தான் ரயில் சேவை உள்ளதா என்று அதிகாரியிடம் வாக்குவாதத்தின் ஈடுபட்டதும் வீடியோவில் தெரியவந்தது. அந்த வீடியோவில், ”அவர் ஆடை அழுக்காக இருப்பதால் இந்த நபர் அனுமதிக்கப்படாதது எந்த விதத்தில் நியாயம். அவர் கொண்டு வந்த மூட்டையில் எதுவும் இல்லை. அவரது ஆடை மட்டுமே உள்ளது. அவர் ஒரு விவசாயி, கிராமத்தில் இருந்து வந்திருக்கிறார். இவர் இதுமாதிரியான ஆடையில் வந்ததால் மற்ற பயணிகளுக்கு தொல்லையாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள். அப்போ! மெட்ரோ ரயில் சேவை விஐபி டிரான்ஸ்போர்ட்டா..? அவரிடம் டிக்கெட் இருக்கிறது. அவரிடம் ஆபத்தா பொருள் ஏதேனும் இருந்தால், நீங்கள் அவரை தடுக்கலாம். நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம். அவரிடம்தான் எதுவும் இல்லையே, உள்ளே விடுவதற்கு என்ன..?” என்று கேட்டனர்.
அதிகாரி பணி நீக்கம்:
பின்னர் அந்த விவசாயில் மெட்ரோ நடைமேடைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, மெட்ரோ அதிகாரிகள் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதை தொடர்ந்து பெங்களூரு மெட்ரோ அந்த அதிகாரியை பணி நீக்கம் செய்தது.
பெங்களூரு ராஜாஜிநகர் ஸ்டேஷனில் மெட்ரோ ரயிலில் ஏற விடாமல் விவசாயி ஒருவர் தனது அழுக்கு உடைகள் காரணமாக அதிகாரியால் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த சம்பவத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “எந்தவொரு நபரும் அவர் அல்லது அவள் அணிந்திருக்கும் ஆடைகளின் தன்மையின் அடிப்படையில் பொது போக்குவரத்திற்கான அணுகலை மறுக்க முடியாது. யாரேனும் ஏதேனும் ஆட்சேபனைக்குரிய பொருட்களை வைத்திருந்தால், சட்டத்தின் விதிகளின்படி மட்டுமே அவரை நிறுத்த முடியும்" என்று தெரிவித்திருந்தது.