மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லியில் சிங்கு, திக்ரி, மற்றும் காசிபூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் 120 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசுடன் 11 சுற்றுக்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றும், தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற ஒத்துழைக்காததால் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் வேளாண் மசோதாவின் நகலை எரித்து நேற்று ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரதி கிசான் யூனியன் அமைப்பின் பொதுச்செயலாளர் சுக்தேவ், மாநிலம் முழுவதும் மொத்தம் 42 இடங்களில் விவசாயிகள் வேளாண் மசோதா நகலை எரித்து ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு மத்திய அரசு கடந்த சில வருடங்களாகவே குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் பொது விநியோக முறையை முடிவுக்கு கொண்டுவர மறைமுக முயற்சியை மேற்கொண்டு வருகிறது. உணவுக்கழகத்தின் பட்ஜெட்டும் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், இந்திய உணவுக்கழகம் பயிர்கள் கொள்முதலுக்கான விதிகளை மாற்றியுள்ளது. இதனால், வரும் ஏப்ரல் 5-ந் தேதி நாடு முழுவதும் மத்திய உணவுக்கழகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.