சர் வி ராமன்:
சர்.சி.வி. ராமன் தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 7, 1888 இல் பிறந்தார். தனது 18வது வயதில் முதல் அறிவியல் ஆய்வறிக்கையை வெளியிட்டார். ஒளியின் சிதறல் குறித்த ஆய்வில், இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். இவரது ஆய்வு ராமன் விளைவு கண்டுபிடிப்புக்கு வழிவகுத்ததால், அவரது பெயருடன் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சத்யேந்திர நாத் போஸ்:
சத்யேந்திர நாத் போஸ், இந்தியாவின் கணிதவியலாளர் மற்றும் விஞ்ஞானியாவார். 1894 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த போஸ், குவாண்டம் மெக்கானிக்ஸ் தொடர்பாக தீவிர ஆய்வில் ஈடுபட்டார். மேலும் அதை தி பிலாசபிகல் மேகசின் என்ற முக்கிய அறிவியல் பத்திரிகைக்கு அனுப்பினார். ஆனால் அதனை அந்த நிறுவனம் நிராகரித்தது.
அதனை தொடர்ந்து, போஸ் தனது குவாண்டம் அறிவியல் தொடர்பான சூத்திரங்களை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அனுப்பினார். இது இன்று நாம் நன்கு அறிந்த புகழ்பெற்ற போஸ்-ஐன்ஸ்டீன் மின்தேக்கிக்கு வழிவகுத்தது. இந்திய அரசாங்கம் இயற்பியலுக்கான போஸின் பங்களிப்பை கௌரவித்து, பத்ம விபூஷன் விருதை வழங்கியது. அவரது பங்களிப்புகள் புகழ்பெற்ற கடவுள் துகள் உட்பட பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது. அவரது பெயரே கொண்டே போஸான் துகள் அறியப்படுகிறது.
டாக்டர் ஹோமி ஜகாங்கீர் பாபா:
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா, பிரபலமான அணு இயற்பியலாளர் ஆவார். டாக்டர் பாபா அணு இயற்பியல் மற்றும் காஸ்மிக் கதிர்கள் குறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டார். ஜனவரி 24, 1966 இல் பிறந்த டாக்டர் பாபா, படிப்பில் சிறந்து விளங்கினார். அவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றவர். 1933 ஆம் ஆண்டில், பாபா தனது முதல் அறிவியல் கட்டுரையான "காஸ்மிக் கதிர்வீச்சை உறிஞ்சுதல்" வெளியிட்டபோது அணு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
1945 இல், அவர் மும்பையில் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (TIFR) ஐ நிறுவினார், மேலும் 1954 இல், அவர் டிராம்பே அணுசக்தி நிறுவனத்தின் இயக்குநராகவும் (இப்போது அவரது அன்பான நினைவாக பாபா அணு ஆராய்ச்சி மையம் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் துறையின் செயலாளராகவும் ஆனார்.பாபா தனது ஆராய்ச்சியின் போது, எலக்ட்ரான்களால் பாசிட்ரான்களை சிதறடிக்கும் நிகழ்தகவுக்கான சரியான வெளிப்பாட்டையும் பெற்றார். இது அவரது நினைவாக பாபா சிதறல் என்று அழைக்கப்படுகிறது. அவர் இந்திய அணு ஆராய்ச்சியில் முன்னோடியாக இருந்தபோதிலும், பாபா எப்போதும் அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவதை ஆதரித்தார் மற்றும் அனைத்து சர்வதேச மன்றங்களிலும் அதன் அழிவுகரமான பயன்பாட்டிற்கு எதிராக வாதிட்டார்.அவர் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்.
அவர் நோபல் பரிசு பெறவில்லை என்றாலும், 1954 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் அவருக்கு வழங்கப்பட்டது. அறிவியல் மற்றும் பொறியியலுக்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்காக தி ராயல் சொசைட்டியின் ஃபெலோவாகவும் சேர்க்கப்பட்டார். ஒவ்வொரு நூற்றாண்டிலும் பிறக்கும் சில சாதனையாளர்களில் அவர் உண்மையிலேயே ஒரு ஐகான், அவரின் பங்களிப்பின் மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தினார். இந்தியா அணுசக்தி துறையில் முன்னேற்றம் கண்டுள்ளது பாபா முக்கிய காரணமாகும்.
இதையும் படிக்கவும்: Biggest Stars: சூரியனை விட ஆயிரம் மடங்கு பெரிய நட்சத்திரங்கள் பால்வெளியில் உள்ளன - எவை என்று தெரியுமா?
விக்ரம் சாராபாய்:
இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவர் இந்தியாவில் அணுசக்தி மேம்பாடு மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்கு முன்னோடியாக இருந்தார். அகமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை 28 வயதில் நிறுவினார். ஒரு நாட்டின் வளர்ச்சியில் விண்வெளி துறை முக்கியத்துவம் கேள்விக்குறியாகி கொண்டிருந்த நேரத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவ இந்திய அரசை வற்புறுத்தினார். இன்று, இஸ்ரோ குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளதற்கு சாராபாய் மிக முக்கிய காரணமாகும். சாராபாய்க்கு பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியாவின் சந்திரயான் -2 இன் லேண்டரான விக்ரம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கும் அவரது பெயரே இடபட்டது. மேலும், சந்திரனில் உள்ள பள்ளத்திற்கு சாராபாய் பெயரிடப்பட்டது.
டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம்:
அவரது அன்பான நடத்தை மற்றும் ஆளுமைக்காக மிகவும் அன்புடன் நினைவுகூரப்படும் கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி, தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் பிறந்தார். குடும்பத்தை நடத்துவதற்காக, சிறுவயதில் செய்தித்தாள்களை விற்றார்.
அப்துல் கலாம் இயற்பியல் மற்றும் வானூர்தி பொறியியலில் பட்டம் பெற்று, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) சேர்ந்தார். பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பணிபுரிந்தார். ஏவுகணை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக, அவர் இந்தியாவின் "ஏவுகணை நாயகன்" என்றும் அழைக்கப்பட்டார்.பாராளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளின் இரு அவைகளின் ஏகோபித்த ஆதரவுடன், கலாம் 2002 இல் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய பாசமும் அக்கறையும் கொண்ட அணுகுமுறைக்காக அவர் "மக்கள் ஜனாதிபதி" என்றும் அறியப்பட்டார். இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா உட்பட பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றார்.