பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையின் போது, நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தடையாக ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பதாகவும், அதனை நீக்க வலுவூட்டப்பட்ட அரிசியைப் பொது விநியோகத் திட்டம், மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றின் மூலம், 2024ஆம் ஆண்டுக்குள் வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். 


’ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியோ, குழந்தைகளுக்கு மதிய உணவாகப் பள்ளிகளில் வழங்கப்படும் அரிசியோ, வேறு எந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியும், வரும் 2024ஆம் ஆண்டுக்குள் வலுவூட்டப்படும்’ என்று அவர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார்.


பிரதமர் பேசும் போது, நாட்டில் ஏழை மனிதர் ஒவ்வொருவருக்கும் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதை அரசு முன்னுரிமையாகக் கருதுவதாகக் கூறினார். “பெண்கள், குழந்தைகளின் வளர்ச்சியை ஊட்டச்சத்துக் குறைபாடு என்னும் பிரச்னை தடுத்துக் கொண்டிருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.



உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நாடு முழுவதும் உணவுக்கான தரக்கட்டுப்பாட்டை நிர்ணயித்து வருகிறது. இந்த ஆணையத்தின் விளக்கத்தின்படி, அரிசியை வலுவூட்டுவது என்பது, அதில் இருக்கும் நுண்சத்துகளைப் பெருக்குவதும், அதன்மூலம் மக்கள் நல்வாழ்வை உறுதிப்படுத்தி, உடல்நலக் கேடுகளில் இருந்து தவிர்ப்பதும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒரு கிலோ அரிசியில், இரும்புச்சத்து (28 மில்லிகிராம் - 42.5 மில்லிகிராம் வரை), ஃபாலிக் அமிலம் (75 - 125 மில்லிகிராம்), வைட்டமின் பி12 (0.75-1.25 மில்லிகிராம்) ஆகியவை அடங்கியிருக்கும். இதில் வலுவூட்டப்படுவதற்காக, Zinc, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி6 ஆகியவை சேர்க்கப்படும். 


2013ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களின் கீழ், 300 லட்சம் டன் அரிசி மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. தற்போதைய 2021-22ஆம் ஆண்டின் விநியோகப்படுவதற்காக, 328 லட்சம் டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது.


உலக நாடுகளில் உற்பத்தியாகும் மொத்த அரிசியில் ஐந்தில் ஒரு பகுதி இந்தியாவில் உற்பத்தியாகிறது. அதுபோல, உலகத்தில் அதிகளவில் அரிசி உண்ணப்படுவதும் இந்தியாவில் தான். நாடு முழுவதும் சராசரியாக ஒவ்வொரு மாதமும் தனி நபர்களால் சுமார் 6.8 கிலோகிராம் அரிசி உண்ணப்படுகிறது.  



கடந்த 2019-20ஆம் ஆண்டில், மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் சார்பில், ‘முதற்கட்டமாகப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், 174.65 கோடி ரூபாய் செலவில் வலுவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஒடிஷா, குஜராத், உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப், சத்திஸ்கர், ஜார்க்கண்ட், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


இந்தத் திட்டத்தின்படி, அரிசி வலுவூட்டப்படுவது அரிசி ஆலைகளில் நடத்தப்படும். கடந்த 2020ஆம் ஆண்டு, பிப்ரவரி முதல் இந்தத் திட்டம் மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.


2021-22 ஆண்டுக்கான யூனியன் பட்ஜெட்டை அறிமுகப்படுத்திய போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிஷன் போஷான் 2.0 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.