நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லி உச்சநீதிமன்றத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. கொடியேற்றி வைத்துப் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா விவாதங்கள் இல்லாமல் சட்டமியற்றப்படுவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்துமுடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விவாதங்களன்றி ஒருமனதாகச் சட்டங்கள் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இன்றைய நிகழ்வில் பேசிய நீதிபதி ரமணா, ‘இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். நாம் இதுவரை என்ன சாதித்துள்ளோம் இனி என்ன உயரத்தை எட்டவேண்டியுள்ளது என்பதை ஆராய்ந்து நமது கொள்கைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு உகந்த நாள் இன்று.75 ஆண்டுகள் என்பது நாட்டின் வரலாற்றில் சிறிய காலம் இல்லை. நான் பத்து வயதாக இருந்தபோது சுதந்திர தினத்துக்கு வெல்லமும் பொரி அவலும் பள்ளியில் தருவார்கள், அந்த நினைவு இன்னமும் இருக்கிறது. அன்று முதல் இன்றுவரை நாடு நன்கு முன்னேறியுள்ளது. முன்பு சிறிய விஷயங்கள் கூட நம்மை மகிழ்ச்சியடையச் செய்வதாக இருக்கும். ஆனால் தற்போது நாம் மகிழ்ச்சியாக இல்லை.நீண்ட சொற்பொழிவு இல்லாமல் சுருக்கமாக எனது உரையை முடித்துக் கொள்கிறேன்.ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். மகாத்மா காந்தி, படேல், நேரு, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டவர்கள் வழக்கறிஞர்கள். ஆனால் அவர்களது தொழில் மட்டுமல்லாமல் சொத்து, குடும்பம் என அத்தனையையும் நாட்டுக்காக தியாகம் செய்தார்கள். லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் முதல் உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள். ஆனால் இன்று அதே சபாக்களில் சட்டத்துக்கு என்ன மதிப்பளிக்கப்படுகிறது என்பதை நாம் நன்கு அறிவோம்.






முன்பு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதங்களில் ஈடுபடுவார்கள். அவை ஆக்கபூர்வமானதாக இருக்கும்.  தொழில் தகராறு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் வாழப்பாடி ராமமூர்த்தி அந்தச் சட்டம் உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து விரிவாகப் பேசினார். அது இன்னும் என் நினைவில் இருக்கிறது. 
 இந்தச் சட்டங்களை புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்தும் பளுவானது முன்பு நீதிமன்றங்களுக்குச் சுமையாக இருந்ததில்லை. ஏனென்றால் அந்தச் சட்டம் ஏன் இயற்றப்படுகிறது, நாடாளுமன்றம் எதற்காக எந்தச் சூழலில் அதனை இயற்றுகிறது என்பது குறித்து எங்களுக்கு தெளிவான பார்வை இருந்தது.
ஆனால் தற்போது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நடைமுறையில் இருக்கும் சட்டங்களில் பல குழப்பங்கள் உள்ளன, சட்டம் குறித்த தெளிவு இல்லை. மேலும் ஒரு சட்டம் ஏன் இயற்றப்படுகிறது என  எங்களுக்கே தெரியவில்லை. இதனால் அரசுக்கும் பொதுமக்களுக்கும் நிறைய குழப்பம் ஏற்படுகிறது. நாடாளுமன்ற அவைகளில் அறிவார்ந்தவர்களும் வழக்கறிஞர்களும் இல்லையென்றால் இதுதான் நிலை. சட்ட வல்லுநர்கள் பொதுவாழ்வில் சமூகத்தை வழிநடத்திச் செல்லவேண்டிய நேரம் இது. அதனால் உங்களை உங்கள் தொழிலோடும், பணம் சம்பாதித்து சொகுசாக வாழ்வதோடு மட்டும் சுருக்கிக் கொள்ளாதீர்கள். பொதுவாழ்வில் நாம் பங்கெடுக்க வேண்டும், நல்ல சேவையாற்ற வேண்டும். நாடும் நன்மையடையும்.