TMC MP Mahua Moitra: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹூவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு தொடர்பாக,  நாடாளுமன்ற நெறிமுறைக் குழு 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.


மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு:


மஹுவா மொய்த்ரா அங்கீகரிக்கப்படாத நபர்களுடன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான பயனர் ஐடியைப் பகிர்ந்து கொண்டதாகவும், தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் இருந்து பணம் மற்றும் வசதிகளைப் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.  இதுதொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவின் விசாரணைக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இந்நிலையில் விசாரணைக்குழு 500 பக்க அறிக்கையை தயார் செய்துள்ளதாகவும், குளிர்கால கூட்டத்தொடரின் போது மக்களவை சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஆங்கில நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. 


நாடாளுமன்ற நெறிமுறைக் குழு அறிக்கை:


மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டில் நாடாளுமன்ற நெறிமுறைக் குழு 500 பக்க அறிக்கையை தயார் செய்துள்ளதாக ஆங்கில நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, “திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க அனுமதிக்கக் கூடாது. அவரது உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வேண்டும். மஹுவா மொய்த்ராவின் நடவடிக்கைகள் "மிகவும் ஆட்சேபனைக்குரியது, நெறிமுறையற்றது, கொடூரமானது மற்றும் குற்றவியல் செயலாகும். இது கடுமையான தண்டனைக்குரியது.  இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாகவும், தீவிரமாகவும், நாடாளுமன்ற அமைப்பு ரீதியாகவும், கால வரையற்ற விரிவான விசாரணையை இந்திய அரசு நடத்த வேண்டும்” என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இன்று ஆஜராகிறார் மஹுவா மொய்த்ரா:


நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவின் விசாரணைக்கு கடந்த வாரம் ஆஜரானபோது, தன்னிடம் மோசமான கேள்விகள் முன் வைக்கப்படுவதாக மஹுவா மொய்த்ரா பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார். இதுதொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கும் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவின் விசாரணைக்காக மஹுவா மொய்த்ரா ஆஜராக உள்ளார்.


மஹுவா சொல்லும் விளக்கம் என்ன?


மக்களவை நெறிமுறைக் குழு கூட்டத்தில் பேசிய மஹுவா மொய்த்ரா, “தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் நட்புரீதியில் கடவுச்சொல்லை பகிர்ந்து கொண்டேன். இதில் சட்ட விதி மீறல் எதுவும் இல்லை. தான் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் தன்னுடையது தான். இதற்காக யாரிடமும் பணம் வாங்கவில்லை என பதிலளித்து இருந்தார். முன்னதாக, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி மஹூவா மொய்த்ரா தன்னிடம் பணம் பெற்றது மட்டுமின்றி, அவருடைய மக்களவைக்கான மின்னஞ்சல் ஐ.டி. மற்றும் கடவுச்சொல்லையும் தனக்கு அளித்ததாக குற்றம் சாட்டியிருந்தார். அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவிற்கு முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இந்த விவகாரம் பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.