Odisha CM Office: ஒடிசாவில் இதுநாள் வரை முதலமைச்சருக்கு என பிரத்யேக அலுவலகம் இல்லாததால், புதிய அலுவலகத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


அலுவலகம் இல்லாத முதலமைச்சர்:


ஒடிசாவின் அடுத்த முதலமைச்சராக மோகன் மாஜியை பாஜக தேர்ந்தெடுத்துள்ளது. ஆனாலும், தற்போது வரை அவருக்கான அலுவலகத்தை தேடும் பணி முடிந்தபாடில்லை. இதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சரான நவீன் பட்நாயக் தான். கடந்த 24 ஆண்டுகளாக அந்த பதவியில் இருந்த அவர், முதலமைச்சருக்கு என பிரத்யேக அலுவலகம் எதையும் கொண்டிருக்கவில்லை. மாறாக தனது சொந்த இல்லமான நவீன் நிவாஸில் இருந்தே அனைத்து அரசு பணிகளையும் மேற்கொண்டார்.  இது முதலமைச்சரின் இல்லமாக திறம்பட செயல்பட்டது.


வர்க் ஃப்ரம் ஹோம் செய்த நவீன் பட்நாயக்:


நவீன் பட்நாயக் கடந்த 2000 ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சராக முதல்முறையாக பொறுப்பேற்றார். அப்போது, அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட வீட்டை தவிர்த்து,  தனது சொந்த வீட்டில் இருந்து வேலை செய்வதை தேர்வு செய்தார். இந்த முடிவு மாநில அரசியல் வரலாற்றில் ஒரு தனித்துவமான முன்னுதாரணமாக அமைந்தது. ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலமாக, மாநிலத்திற்கான அனைத்து உத்தியோகபூர்வ மற்றும் நிர்வாகப் பணிகளும் நவீன் நிவாஸில் இருந்தே மேற்கொள்ளப்பட்டன. இது அவரது தந்தையும், ஒடிசா முன்னாள் முதலமைச்சருமான பிஜு பட்நாயக் கட்டிய அரண்மனை மாளிகை ஆகும். மிக நீண்ட காலம் முதலமைச்சராக இருந்த சாதனைக்கு இன்னும் ஒரு மாத கால இடைவெளியே இருந்த நிலையில், பட்நாயக் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.


பாஜக அரசுக்கு வந்த தலைவலி:


நவீன் பட்நாயக் தனது சொந்த வீட்டில் இருந்து வேலை செய்து வந்த நிலையில், புதிய முதலமைச்சருக்கு பொருத்தமான உத்தியோகபூர்வ இல்லத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மாநில நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போதைய முதலமைச்சரின் குறைதீர்க்கும் பிரிவு உட்பட காலியாக உள்ள பல குடியிருப்புகள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்று தேர்வு செய்யப்பட்டாலும், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால், புதிய அலுவலகம் தயாராக சில காலம் ஆகும் என கூறப்படுகிறது. இதனால், புதிய முதலமைச்சருக்கான உத்தியோகப்பூர்வ இல்லத்தை தேர்வு செய்வது பாஜகவிற்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது.  இதற்கிடையில், புதிய முதலமைச்சருக்கு தற்காலிக தங்குமிடமாக மாநில விருந்தினர் மாளிகையில் ஒரு தொகுப்பை தயார் செய்ய மாநில நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


ஒடிசா முதலமைச்சர் இல்லம்:


முன்னதாக, ஹேமானந்தா பிஸ்வால் மற்றும் ஜானகி பல்லப் பட்நாயக் உள்ளிட்ட முன்னாள் முதலமைச்சர்கள், தலைநகர் மருத்துவமனையை ஏஜி சதுக்கத்துடன் இணைக்கும் சாலையில், புவனேஸ்வர் கிளப் அருகே அமைந்துள்ள ஒற்றை மாடி கட்டிடத்தில் இருந்து செயல்பட்டனர். 1995ம் ஆண்டு ஜே.பி.பட்நாயக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதலமைச்சர் அலுவலகம் இரண்டு மாடிக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது, அதுவே தற்போதைய முதலமைச்சரின் குறைதீர்க்கும் பிரிவு ஆகும். இந்த அமைப்பு கிரிதர் கமங்கின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் பயன்படுத்தப்பட்டது.


பட்நாயக் குடும்பத்தின் அரண்மனை கட்டாக்கில் உள்ளது. அங்கு பிஜு பட்நாயக்கின் மூன்று குழந்தைகளான பிரேம், கீதா மற்றும் நவீன் ஆகியோர் பிறந்தனர். கடந்த ஐந்து தசாப்தங்களாக, ஆனந்த் பவன் என்ற அந்த அரண்மனை பராமரிப்பாளரால் நிர்வகிக்கப்படுகிறது. பிஜு பட்நாயக் புதிய தலைநகரில் நவீன் நிவாஸைக் கட்டிய பிறகு புவனேஸ்வருக்குச் சென்றபோது இந்த ஏற்பாடு தொடங்கியது. இந்த அரண்மனை தற்போது அருங்காட்சியகமாக செயல்படுகிறது. பிஜு பட்நாயக்கிற்கு டெல்லியில் உள்ள அவுரங்கசீப் சாலையில் ஒரு வீடு உள்ளது.


இன்று பதவியேற்பு விழா:


ஒடிசாவில் பாஜக தலைமையிலான புதிய அரசு இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மதியம் 2:30 மணிக்கு புவனேஸ்வர் வந்து விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவனுக்கு செல்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு ஜனதா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.