இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இந்தியரும் இந்துதான். இந்தியர்களின் டிஎன்ஏ ஒன்றுதான். அதனால் இந்தியர்கள் மதச் சடங்கு முறைகளை மாற்றும் அவசியம் ஏதுமில்லை அதை யாரும் முயற்சிக்கவும் வேண்டாம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.


சட்டீஸ்கர் மாநிலம் சூர்குஜா மாவட்டத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் பழைய அம்சம். இந்துத்துவா தான் உலகிலேயே அனைவரையும் ஒன்றிணைக்கும் அம்சம். இந்துத்துவா கொள்கை வேற்றுமையை மதிப்பதோடு மனிதகுலத்தை ஒன்றாக கொண்டுவருவதை நம்புகிறது.


1925 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தோற்றுவிக்கப்பட்டதில் இருந்தே நாங்கள் இதனை சொல்லி வருகிறோம். இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இந்தியரும் இந்துதான். இந்தியர்களின் டிஎன்ஏ ஒன்றுதான். அதனால் இந்தியர்கள் மதச் சடங்கு முறைகளை மாற்றும் அவசியம் ஏதுமில்லை அதை யாரும் முயற்சிக்கவும் வேண்டாம். இந்தியாவை தன் தாய்நாடாக கருதும் யாராக இருந்தாலும் அவர் வேற்றுமையில் ஒன்றுமை கலாச்சாரத்துடன் இயைந்து வாழ முற்பட்டால் அவர்கள் மதம், கலாச்சாரம், மொழி, உணவு, பழக்கவழக்கம், கொள்கை என எல்லாவற்றையும் கடந்து இந்து தான்.


இந்துத்துவா கொள்கை மட்டும்தான் உலகிலேயே வேற்றுமைகளை இணைக்க வேண்டும் என்ற சித்தாந்தம். ஏனெனில் இந்த நாட்டில் அது ஆண்டாண்டு காலமாக வேற்றுமையில் ஒற்றுமையை தூக்கி நிறுத்தியுள்ளது. இது தான் உண்மை. இந்த உண்மையை ஆணித்தரமாக பேச வேண்டியுள்ளது. அர்எஸ்எஸ்ஸின் பணியானது ஆயிரமாயிரம் தனிநபர் மற்றும் தேசிய தன்மையை இணைத்து மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதே.


அனைத்து மத நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும். ஆனால் அதே வேளையில் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே டிஎன்ஏ தான் என்பதும் மறுப்பதற்கில்லை. எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்றுதான். நம் மூதாதையர்கள் ஒன்றுதான். 40 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகண்ட பாரதத்தின் வழிவந்த எல்லா இந்தியர்களின் டிஎன்ஏவும் ஒன்றுதான். ஒவ்வொரு பாதையும் ஒரே இடத்தை நோக்கித்தான் அழைத்துச் செல்கிறது.


அனைவரையும் மதியுங்கள், அனைத்து மதத்தையும் கலாச்சாரத்தையும் மதியுங்கள் ஆனால் உங்கள் பாதையை நீங்கள் பின்பற்றுங்கள். உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுங்கள். அடுத்தவர் நலன் கருதாமல் சுயநலமாக இருந்துவிடாதீர்கள். ஒட்டுமொத்த தேசமும் இணைந்து தான் கொரோனா பெருந்தொற்றை வென்றது. நமது கலாச்சாரம் நம் அனைவரையும் ஒன்றிணைத்து விடுகிறது. துயரம் வரும் வேளையில் நாம் ஒன்றிணைந்துவிடுகிறோம். நமக்குள் வேற்றுமை இருந்தாலும் தேசத்திற்கு நெருக்கடி என்றால் நாம் ஒன்றாக இணைந்துவிடுகிறோம். இது தான் நமது பண்பாடு. இவ்வாறு அவர் பேசினார்.