கொரோனா ஊரடங்கு காலத்திலும் வளங்களை சேர்த்த பணக்காரர்கள்,பெருநிறுவனங்கள், செல்வந்தர்கள் மீது வரி விதிக்க வேண்டும் என்று 10ல் 8 இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  


வரும் பிப்ரவரி 1ம் தேதி, 2022-23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் நேரடி வரி விகிதத்தில் சில முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கோடிக்கணக்கான இந்திய மக்களின்  வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் மீட்க முயற்சியாக சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   


இந்த பட்ஜெட்டில், சாமானிய மக்களின் உண்மையான எதிர்பார்ப்புகள் என்ன என்ற கேள்விக்குப் பதில் தேடி, நாடு முழுவதும் உள்ள 3231 பேரிடம் Fight Inequality Alliance India என்ற சமூகநல அமைப்பு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. 


கருத்துக் கணிப்பின் மூலம் கிடைத்த பதில்கள்:  


சுகாதாரம் மற்றும் மகப்பேறு சிகிச்சை, விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம் ஆகிய உலகளாவிய சமூக பாதுகாப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அமைப்புசாரா தொழிலாளர்களில் 94.3 சதவீதம் பேர் விரும்புகின்றனர். 


பட்டியல் மற்றும் பழங்குடியின வகுப்புகள் தரமான மருத்துவ சேவைகளை எதிர்பார்க்கின்றனர். 97.9 சதவீத  பட்டியலின மக்கள் தேசிய சுகாதார இயக்கத்தில் அதிக நிதி ஒதுக்கவேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.     


18-24 வயதுக்குட்பட்ட பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களில் 96,6 சதவிகிதம் பேர், தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் கல்விக்கு முந்தைய மற்றும் பிந்தைய உதவித்தொகை திட்டங்களுக்கு அதிக நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.   


சமுதாயத்தில் பாலியல் ரீதியிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று  91.4 சதவீதம் பேர்  கருத்து தெரிவித்துள்ளனர். 


ஊரடங்கு காரணமாக பள்ளி இடைநிற்றல் பிரச்சனைகளை சந்தித்த மாணவர்களுக்குக் கூடுதல் கல்வி ஆதரவை வழங்குவதை இந்த நிதிநிலை உறுதி செய்ய வேண்டும் என்று 89.3% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.  


சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறிய தனியார் நிறுவனங்களுக்கு மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள்  அபராதம்  விதிக்க வேண்டும் என்று 89% பேர் தெரிவித்துள்ளனர். 


2 கோடிக்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ள தனிநபர்களிடம்  கோவிட் - கூடுதல் வரி ( Covid- Surcharge) வசூலிக்க வேண்டும் என்று 84% பேர் தெரிவித்துள்ளனர். 


சுகாதார சேவையை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று 94.4% பேர் தெரிவித்துள்ளனர். 


முன்னதாக, கடந்தாண்டில் 84 சதவீத இந்திய குடும்பங்களின் சராசரி மாத வருமானம் குறைந்துள்ளதாக OXfam அறிக்கை தெரிவித்தது. இருப்பினும், அதே கால கட்டத்தில் நாட்டின் ஒட்டு மொத்த செல்வந்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறியிருந்தது.  


2015ம் ஆண்டில் இருந்து, இந்தியாவின் ஒட்டுமொத்த வளங்கள் யாவையும், 1 சதவிகிதம் எண்ணிக்கை கொண்ட செல்வந்தர்களை நோக்கி செல்கிறது 


நாட்டின் 45% பொருளாதார வளங்களை, மேல்தட்டு தளத்தில் உள்ள 10% பேர் கைப்பற்றியுள்ளனர். அதாவது, இந்தியாவில் வாழும் 50 கோடி மக்களுக்கு இணையான செல்வ வளத்தை முதல் 98 செல்வந்தர்கள் கொண்டுள்ளனர். 


முதல் 100 செல்வந்தர்களின் நிகர மதிப்பு மட்டும் 775 பில்லியன் அமெரிக்க டாலராகும் (இந்திய ரூபாயில் - 5,75,35,61,25,00,000). கடந்தாண்டில் மட்டும், 80% இந்திய செல்வந்தர்களின் வளங்கள் அதிகரித்துள்ளது. அதேசமயம், 84 சதவீத இந்திய குடும்பங்களின் சராசரி மாத வருமானம் குறைந்துள்ளது.  


போன்ற புள்ளிவிவரங்களையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.