மணிப்பூரில் கடந்த 4 மாதங்களாக நடந்து வரும் இனக்கலவரம் இந்தியா மட்டும் இன்றி உலக நாடுகளிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பெரும்பான்மை மெய்தேயி சமூக மக்களுக்கும், பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் நாட்டையே உலுக்கியது.


நாட்டை உலுக்கிய மணிப்பூர் இனக்கலவரம்:


இந்த இனக்கலவரத்தின் காரணமாக இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளது. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தேயி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது.


மாநிலம் முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் மனித நேயத்தையே கேள்விக்குள்ளாக்கி வருகிறது. குஜராத் இனக்கலவரத்தை போன்று, அப்பாவி மக்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


இம்பாலில் இருந்து துடைத்தெறியப்பட்ட பழங்குடி மக்கள்:


மணிப்பூரின் மொத்த மக்கள் தொகையில் மெய்தேயி சமூக மக்கள், 53 சதவிகிதத்தினர் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் இம்பால் பள்ளத்தாக்கில்தான் வாழ்ந்து வருகின்றனர். அதேசமயம், குக்கி, நாகா இன மக்கள், மாநிலத்தின் மக்கள் தொகையில் 40 சதவிகிதம் உள்ளனர். இவர்கள், அடிப்படை வசதி கூட இல்லாத மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.


மே மாதம் வெடித்த இனக்கலவரத்தை தொடர்ந்து, இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்ந்து வந்த ஒரு சில குக்கி சமூக மக்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் வன்முறை வெடித்த பிறகு, குக்கி சமூகத்தை சேர்ந்த 5 குடும்பங்கள் மட்டுமே இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்ந்து வந்தனர்.


"இதைவிட வெட்கக்கேடான ஒன்று நடந்து விட முடியாது"


ஆனால், கடந்த சனிக்கிழமை அதிகாலை, அந்த ஐந்து குடும்பத்தையும் பள்ளத்தாக்கில் இருந்த அவர்களின் வீடுகளில் இருந்து பாதுகாப்பு படை வீரர்கள், வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர். இதன் மூலம், இம்பால் பள்ளத்தாக்கில் இனஅழிப்பு முற்றிலுமாக நிறைவடைந்திருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதைவிட வெட்கக்கேடான ஒன்று நடந்து விட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.


இதுகுறித்து அவர் எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், "இம்பாலில் வாழ்ந்து வந்த கடைசி 5 குக்கி குடும்பங்களை அதிகாரிகள், அவர்களது வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன் மூலம்,  மெய்தேயி சமூக மக்கள் ஆதிக்கம் செலுத்தும் இம்பால் பள்ளத்தாக்கில் இனஅழிப்பு நிறைவடைந்துள்ளது தெரிய வருகிறது.


இன அழிப்பை மாநில அரசு தலைமை தாங்கி நடத்தியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசு நடப்பதாக மத்திய அரசு கூறுகிறது.
இதை விட வெட்கக்கேடானது வேறு எதுவும் இருக்க முடியாது. சட்டத்திற்கு புறம்பாக இந்தளவுக்கு மோசமாக இறங்கியிருப்பது இதுவரை நடைபெறாத ஒன்று" என பதிவிட்டுள்ளார்.


இதையும் படிக்க: Indian Origin Leaders: ஆசியா முதல் அமெரிக்கா வரை.. உலகை ஆட்டிப்படைக்கும் இந்திய வம்சாவளியினர் - ஓர் அலசல்..!