அதீத வேலைப்பளுவால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இளம்பெண் அன்னா செபாஸ்டியன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், அவரின் மரணத்திற்கு காரணமாக கூறப்படும் அவர் பணிபுரிந்த எர்ன்ஸ்ட் அண்ட் யங் இந்தியா (E&Y) நிறுவனம் உரிமம் இன்றி இயங்கி வந்தது தெரிய வந்துள்ளது.


இன்றைய உலகில் மன அழுத்தம் என்பது மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. ஒவ்வொருவரும் ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். குறிப்பாக, வேலை அழுத்தம் என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவரையும் பாதிக்கக்கூடிய பிரச்சனையாகிவிட்டது.


உரிமம் இன்றி இயங்கிய EY நிறுவனம்:


இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 26 வயதான பட்டய கணக்காளர் (Chartered Accountant) அன்னா செபாஸ்டியன் அதீத வேலை அழுத்தம் காரணமாக உயிரிழந்ததாக புகார் எழுந்தது. அவரின் மரணத்தை தொடர்ந்து, அவர் பணிபுரிந்து வந்த எர்ன்ஸ்ட் அண்ட் யங் இந்தியா (E&Y) நிறுவனம் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.


இந்த நிலையில், E&Y நிறுவனம் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த நிறுவனம் பணி நேரத்தை ஒழுங்குபடுத்தும் உரிமம் இல்லாமல் இயங்கி வந்துள்ளது. இதை மாநில அரசின் உயர் அதிகாரி உறுதி செய்துள்ளார்.


இதுகுறித்து மகாராஷ்டிராவின் கூடுதல் தொழிலாளர் ஆணையர் சைலேந்திர போல் கூறுகையில், "மாநில கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் கட்டாயமாக பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், பதிவு செய்யாமல் இயங்கி வந்திருக்கிறது.


நடவடிக்கை எடுக்கப்படுமா?


வயது வந்தோருக்கான அதிகபட்ச வேலை நேரத்தை ஒவ்வொரு நாளும் ஒன்பது மணிநேரமாகவும் ஒவ்வொரு வாரமும் 48 மணிநேரமாகவும் சட்டம் வரையறுக்கிறது. சட்டத்தின் கீழ் பதிவு செய்ய கடந்த 2024ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தொழிலாளர் துறையில் விண்ணப்பித்திருக்கிறது. இந்த அலுவலகத்தை தொடங்கிய 2007 முதல் விண்ணப்பிக்காததால் நாங்கள் அதை நிராகரித்தோம்.


இத்தனை ஆண்டுகளாக ஏன் பதிவு செய்ய முன்வரவில்லை என்பது குறித்து விளக்கமளிக்க ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது" என்றார். இந்த சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவில்லை என்றால் நிறுவனங்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்படும்.


சட்டத்திற்கு இணங்கி செயல்படாமல், அதீத வேலைப்பளு காரணமாக அசம்பாவிதம் நடந்து ஊழியருக்கு கடுமையான காயம் அல்லது மரணம் ஏற்பட்டால், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ₹ 500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.