இந்தி திணிப்பு குறித்த தனது கருத்து சர்ச்சையைக் கிளப்பிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் இன்று தனது கருத்தை ஆதரிக்கும் விதமாக, வடக்கில் இருந்து இந்தி மொழியின் வருகையே தெற்கில் உள்ள மக்களைப் பிளவுபடுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தி திணிப்பு தமிழர்களின் நிலையை 'சூத்திரர்கள்' என்பதை உறுதிப்படுத்தும் எனக் கூறியிருந்த இளங்கோவன் தனது கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் இவ்வாறு கூறியுள்ளார். இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சூத்திரன்" என்ற வார்த்தையை நான் உருவாக்கவில்லை, தமிழ் சமூகம் சமச்சீறான சமுதாயம், தெற்கில் வகுப்பு வேறுபாட்டைக் கடைப்பிடிக்கவில்லை. வடக்கிலிருந்து மொழி நுழைந்ததால் மக்கள் பிளவுப்பட்டார்கள். பின்னர் திராவிட இயக்கத்தின் ஆட்சிக்காலத்தின் போது மக்கள் சூத்திரர்கள், ஓபிசிகளின் கல்வி உரிமைகளுக்காக போராடினார்கள்” மேலும், "நான் சொன்னது என்னவென்றால், இந்தி ஆதிக்கம் காலடி எடுத்து வைக்கும்போது அது வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட கலாச்சார முறையை நமக்குக் கொண்டு வரக்கூடும். எனவே அது நாம் சூத்திர வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்தும்" என்று திமுக எம்.பி. இளங்கோவன் கூறியுள்ளார். முன்னதாக, டி.கே.எஸ்.இளங்கோவன், இந்தி மொழி தமிழர்களை "சூத்திரர்" என்கிற நிலைக்குத் தள்ளும் என்றும், நாட்டில் உள்ள இந்தி பேசும் மாநிலங்கள் வளர்ந்த மாநிலங்கள் அல்ல என்றும், உள்ளூர் மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவைதான் வளர்ந்த மாநிலங்கள் என்றும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. .






சமீபத்தில் திராவிடர் கழகம் நடத்திய மொழித் திணிப்பு மாநாட்டில் பேசிய இளங்கோவன், “இந்தி திணிப்பின் மூலம் மனுதர்மத்தை திணிக்க முயற்சி நடக்கிறது” என்று கூறியது வைரலானது. "இந்தி என்ன செய்யும்? நம்மை சூத்திரராக்கும். அதனால் நமக்கு எந்தப் பயனும் இல்லை" என்று அவர் கூறினார். இளங்கோவன் மேலும் இந்தி பேசாத மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை சுட்டிக்காட்டி, இந்த மாநிலங்கள் வளர்ந்ததா இல்லையா என்று கேட்டார். "நான் ஏன் இதைக் கேட்கிறேன் தெரியுமா? இந்த மாநிலங்களில் உள்ள மக்களின் தாய் மொழி இந்தி அல்ல. இந்தி பேசும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட உத்தரகாண்ட் ஆகியவை வளர்ச்சியடையாத மாநிலங்கள் " என்று கூறினார்