வேலைவாய்ப்பின்மையின் நிலை:


வேலைவாய்ப்பு என்பது நாட்டில் படித்த இளைஞர்களுக்கு மிகப்பெரிய சவாலான விசயங்களில் ஒன்றாகவே இளைஞர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. குறிப்பாக  படித்த இளைஞர்கள் பலரும் படித்த வேலையை விடுத்து கிடைத்த வேலைக்கு சென்றுவிட வேண்டும் என்ற எண்ணங்களில் இருப்பதாகவே தெரிவிக்கின்றனர். அந்த அளவிற்கு நாட்டில் வேலைவாய்ப்பின்மை என்பது அதிகரித்துள்ளது. இதனால் குறைந்த அளவிலான காலிபணியிடங்கள் அறிவிப்பு வந்தாலும் சரி பெரும்பான்மையான இளைஞர்கள் போட்டி போட்டு முண்டியத்து அந்த வேலையை எப்படியாவது நாம் பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு வந்து குவியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 


குறிப்பாக தமிழகத்தில் துப்புரவு பணிக்கான அறிவிப்பு நேர்காணலில் ஆயிரக்கணக்கான படித்த பட்டதாரிகள் குவிந்த சம்பவமும் நிகழ்ந்தது. இந்த சூழலில் தற்போது இந்தியாவின் தலைநகரான மும்பையில் பல ஆயிரம் நிறுவனங்கள் உள்ள நிலையில் தற்போதைய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோக்களும் எக்ஸ் வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


ஏர் இந்தியா அறிவிப்பும், குவிந்த இளைஞர்களும்:


ஏர் இந்தியா நிறுவனங்களின் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் உடமைகளை விமானங்களில் இருந்து ஏற்றி, இறக்கும் பணி மற்றும் உணவுகளை விமானங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி உள்ளிட பணிகளை நிரப்புவதற்காக 2216 காலி பணியிடங்களை அறிவித்தது. மேலும் அப்பணியிடங்களுக்கான  நேர்காணல் ஜூலை 16 ஆம் தேதி நேற்று முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் முதலே அப்பணியிடங்களுக்காக பெரும்பாலான இளைஞர்கள் மும்பை அலுவலகத்தில் குவியத்தொடங்கினர்.  மேலும் நேர்காணல் நடைபெறும் நாளான நேற்று சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் திரண்டனர்.


2 ஆயிரம் பணியிடங்களுக்காக 25 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் திரண்டதால் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் விமான ஊழியர்கள் திணறினர். நேர்காணல் நடைபெறும் கவுண்டர்களை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று ஒருவருக்கொருவர் முட்டி மோதி நுழைய முயன்றதால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


இதனால் பெரும் அசம்பாவிதம் நிகழ கூடுமோ என்ற அச்சத்தில் அங்குள்ள ஊழியர்கள் தங்களது விண்ணப்பங்கள் பயோடேட்டாக்களை கொடுத்து செல்லுங்கள் அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு நேர்காணலுக்கு அழைப்பு வரும் என்று  நேற்றைய நேர்காணலை ரத்து செய்து ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்ததை தொடர்ந்து பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






3 வருட ஒப்பந்த அடிப்படையில் சுமைதூக்கும் தொழிலாளி பணிக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற நிலையில் குவிந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உலகளாவிய செயல்பாட்டில் முதல் பத்து வர்த்தக மையங்களில் மும்பையும் ஒன்றாக இருக்கும் நிலையில் வர்த்தக தலைநகரிலே 2 ஆயிரம் பணியிடங்களுக்கு 25 ஆயிரம் பேர் குவிந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.