கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி, டி பிரிவு பணியிடங்களில் கன்னடர்களுக்கே 100% வேலை வழங்கப்பட வேண்டும் என்ற மசோதாவுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கன்னடர்களின் நலனைக் காப்பதே எங்களின் முதல் கடமை


இதுகுறித்து கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறும்போது, ’’நாங்கள் கன்னடர்களுக்கு ஆதரவான அரசு. கன்னடர்களின் நலனைப் பேணிக் காப்பதே எங்களின் முதல் கடமை. திங்கட்கிழமை நடந்த கேபினெட் குழு கூட்டத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் சி மற்றும் டி பிரிவு பணியிடங்கள் அனைத்தையும் 100 சதவீதம் கன்னடர்களுக்கே அளிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.


தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கான கர்நாடக மாநில வேலைவாய்ப்பு மசோதா, 2024 (Karnataka State Employment of Local Candidates in the Industries, Factories and Other Establishments Bill, 2024) என்று இதற்குப் பெயரிட்டுள்ளதாகத் தெரிகிறது.


 இதுகுறித்து வெளியான தகவலின்படி, இந்த மசோதா நாளை (வியாழக்கிழமை) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மீறும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது.


திறமையான உள்ளூர் ஆட்கள் இல்லாதபட்சத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அரசுடன் இணைந்து 3 ஆண்டுக்குள் திறமையானவர்களை உருவாக்க வேண்டும். போதிய அளவில் உள்ளூர் மக்கள் இல்லாத நிலையில், தளர்வுகள் குறித்து யோசிக்கலாம் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.






வளர்ச்சிக்குத் தடையாகிவிடக் கூடாது


எனினும் இதற்கு தொழிலதிபர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பயோகான் நிர்வாகத் தலைவர் கிரண் மஸும்தார் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘’உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற அரசின் முனைப்பு, தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் கர்நாடகாவின் திறனை பாதித்துவிடக் கூடாது. இந்த மசோதாவில் அதிகத் திறமை கோரும் பணிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு விலக்கு அளிக்கும் முறை இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.