காங்கிரஸின் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு சத்தீஸ்கரில் நடைபெறவிருந்த நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தியுள்ளது. நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


எதிர்கட்சி மாநிலங்களில் தொடரும் ரெய்டு:


சமீப காலமாக, எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில், சிபிஐ, அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொள்வது தொடர் கதையாகிவிட்டது. ஆம் ஆத்மி ஆளும் டெல்லியிலும் பாரத் ராஷ்டிரிய சமிதி ஆளும் தெலங்கானாவிலும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சோதனை நடத்தியிருந்தது.


சிபிஐ, அமலாக்கத்துறை சோதனை நடத்தும் நேரம் குறித்து எதிர்கட்சியினர் தொடர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். முக்கிய அரசியல் நடவடிக்கையின்போது, சோதனை நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைத்து வருகிறது எதிர்கட்சிகள்.


சத்தீஸ்கரில் புதிய பரபரப்பு:


அதன் தொடர்ச்சியாக, அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85ஆவது மாநாடு சத்தீஸ்கரில் நடைபெறவிருந்த நிலையில், சோதனை நடைபெற்றிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.


இன்று காலை குறைந்தது 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் துர்க் எம்எல்ஏ தேவேந்திர யாதவ், சத்தீஸ்கர் காங்கிரஸ் பொருளாளர் ராம்கோபால் அகர்வால், கட்டிடத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் சுஷில் சன்னி அகர்வால் மற்றும் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் ஆகியோரின் வீடுகளும் அடங்கும்.


இதுகுறித்து சத்தீஸ்கர் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பூபேஷ் பாகேல் தனது ட்விட்டர் பக்கத்தில், "சத்தீஸ்கர் காங்கிரஸின் பொருளாளர், கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் மற்றும் எம்.எல்.ஏ., உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரது வீடுகளில் இன்று அமலாக்கத்துறை இயக்குநரகம் சோதனை நடத்தியது.


இன்னும் நான்கு நாட்களில் ராய்ப்பூரில் காங்கிரஸ் மாநாடு நடக்கிறது. தலைவர்களை தடுத்து நிறுத்தினால் நம் நம்பிக்கையை உடைக்க முடியாது. பாரத் ஜோடோ யாத்ரா வெற்றி பெற்று அதானியின் உண்மை அம்பலமானதால் பாஜக விரக்தியில் உள்ளது. இந்த ரெய்டு கவனத்தை திசை திருப்பும் முயற்சி. உண்மை நாட்டுக்கு தெரியும். போராடி வெற்றி பெறுவோம்" என பதிவிட்டுள்ளார்.


மூன்றாம் தர அரசியல்:


அமலாக்கத்துறை சோதனையை மூன்றாம் தர அரசியல் என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. சோதனை குறித்து விளக்கம் அளித்த அமலாக்கத்துறை, "நிலக்கரி வரி விதிப்பில் சட்டவிரோதமாக மொத்தம் 52 கோடி ரூபாய் ஒரு அரசியல் கட்சியின் மூத்த தலைவருக்கும், 4 கோடி ரூபாய் சில சத்தீஸ்கர் எம்எல்ஏக்களுக்கும் சென்றது.


சத்தீஸ்கரில் அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் இடைத்தரகர்கள் அடங்கிய குழு மூலம் ஒவ்வொரு டன் நிலக்கரிக்கும் சட்டவிரோதமாக 25 ரூபாய் விதிக்கப்படும் மெகா ஊழல் நடந்துள்ளது"


இந்தாண்டியின் இறுதியில், சத்தீஸ்கரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சோதனை அரசியல் வட்டாரங்களில் புயலை கிளப்பியுள்ளது.