ஒடிசா மாநிலம் பாலசோரில் 291 பேர் உயிரிழந்த ரயில் விபத்திற்கு மனித தவறுகள் தான் காரணம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.


தசாப்தத்தின் கோர விபத்து:


ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பகாநகா பகுதியில், கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா நோக்கி சென்றுகொண்டிருந்த ஷாலிமார் விரைவு ரயில் மற்றும் பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஆகியவை  மோதி விபத்துக்குள்ளானது. சற்றும் எதிர்பாராத நேரத்தில் நடைபெற்ற இந்த கோர விபத்தில் 291 பேர் உயிரிழந்ததுடன், 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


51 உடல்களின் நிலை என்ன?


விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் இழப்பீட்டு தொகையை அறிவித்தன. அதேநேரம், விபத்தில் பலியான 51 பேரின் உடல்களை இதுவரை யாருமே உரிமை கோராததால், ஒடிசா மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே விபத்துக்கான காரணம் சதி வேலையா அல்லது மனித தவறா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ரயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தவறான சிக்னலே ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.


மனித தவறுகளே காரணம்:


விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி, அதுதொடர்பான அறிக்கையை ரயில்வே ஆணையத்திடம் கடந்த வாரம் சமர்பித்துள்ளனர். அதன்படி, பகாநகா பஜார் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சிக்னலிங்-சர்க்யூட் மாற்றத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஜுன் 2ம் தேதி கோரமண்டல் விரைவு ரயிலுக்கு தவறான சிக்னல் கிடைத்துள்ளது. அதாவது, மெயிண்டனன்ஸ் பணிகளுக்கு பிறகு சிக்னல் இயந்திரங்களில் உள்ள, வயர்களை இணைப்பதில் குழப்பம் ஏற்பட்டு தவறாக இணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, மெயின் லைனில் செல்ல வேண்டிய கோரமண்டல் விரைவு ரயில் லூப் லைனில் சென்று சரக்கு ரயிலின் பின்னால் வேகமாக மோதியது. சிக்னலிங் பிரிவு தான் விபத்திற்கான முக்கிய காரணம் என்றாலும், செயல்பாட்டு துறையை சேர்ந்த ஸ்டேஷன் மாஸ்டரும் சிக்னல் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் இருந்த குறைகளை கவனிக்க தவறியதும் மோசமான விபத்திற்கு முக்கிய காரணம் தான். ” என குறிப்பிடப்பட்டுள்ளது.


அடுத்து என்ன?


கடந்த சில தசாப்தங்களில் உலக அளவில் நடைபெற்ற மிக மோசமான ரயில் விபத்தாக, ஒடிசா ரயில் விபத்து கருதப்படுகிறது. உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுதிய இந்த விபத்திற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் முதற்கட்டமாக ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அறிக்கை சமர்பித்துள்ளது. அதனடிப்படையில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.