Employment: 2014லிருந்து 2024 வரை வேலைவாய்ப்பு அதிகரித்ததா? குறைந்ததா? புள்ளிவிவரம் சொல்வது என்ன?

India Employment Data: 2014-15 ஆம் ஆண்டில் 47.15 கோடியாக இருந்த வேலைவாய்ப்பு 2023-24 ஆம் ஆண்டில் 64.33 கோடியாக அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Continues below advertisement

2017-18 ஆம் ஆண்டு முதல் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் நடத்தப்படும் வருடாந்திர காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு மூலம் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த தரவு சேகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஜூன் வரை கணக்கெடுப்பு காலமாக உள்ளது.

Continues below advertisement

”வேலைவாய்ப்பு அதிகரிப்பு:”

சமீபத்திய வருடாந்திர காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு  அறிக்கைகளில் கிடைக்கும் தரவுகளின்படி, கோவிட் காலம் உட்பட கடந்த 7 ஆண்டுகளில் வேலைவாய்ப்பைக் குறிக்கும் மதிப்பிடப்பட்ட தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் 2017-18 ல் 46.8 சதவிகிதத்தில் இருந்து 2023-24 இல் 58.2 சதவிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

அதே காலகட்டத்தில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கான வழக்கமான நிலையில் வேலையின்மை விகிதம்  6 சதவிகிதத்திலிருந்து 3.2% வரை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

மேலும், செப்டம்பர் 2017 முதல் செப்டம்பர் 2024 வரை 7 கோடிக்கும் அதிகமான நிகர சந்தாதாரர்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சேர்ந்துள்ளனர், இது வேலைச் சந்தையின் முறைப்படுத்தல் அதிகரித்துள்ளதைக் குறிப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி அறிக்கை:

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள KLEMS (K: Capital, L: Labour, E: Energy, M: Materials and S: Services) தரவுத்தளம் அகில இந்திய அளவில் வேலைவாய்ப்பு மதிப்பீடுகளை வழங்குகிறது. 

இத்தரவுத்தளத்தின் சமீபத்திய தரவுகளின்படி, 2023-24 ஆம் ஆண்டிற்கான தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2014-15 ஆம் ஆண்டில் 47.15 கோடியாக இருந்த வேலைவாய்ப்பு 2023-24 ஆம் ஆண்டில் 64.33 கோடியாக அதிகரித்துள்ளது. 2014-15 முதல் 2023-24 வரை மொத்த வேலைவாய்ப்பு அதிகரிப்பானது, சுமார் 17.18 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதே அரசின் முன்னுரிமையாகும். அதன்படி, நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

பட்ஜெட் அறிவிப்பு:

மேலும், 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், 5 ஆண்டு காலத்தில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில், 2 லட்சம் கோடி ரூபாய் மத்திய ஒதுக்கீட்டில் பிரதமரின் 5 திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளின் தொகுப்பை அரசு அறிவித்துள்ளது எனவும் மாநிலங்களவையில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Continues below advertisement