தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேதி வாரியாக  இணையத்தில் பதிவேற்றியது இந்திய தேர்தல் ஆணையம்


தேர்தல் பத்திரங்கள்:


அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும் வகையில், தேர்தல் பத்திரங்கள் என்ற முறை தொடங்கப்பட்டது. இந்த பத்திரங்களானது, எஸ்.பி.ஐ வங்கி மூலமாக மட்டுமே வழங்கப்பட்டது. இந்த பத்திரங்கள் வழங்கப்பட்டதில், பணம் அளித்தவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்பட்டன. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்தவர்கள் மற்றும் அரசியல் கட்சி பெற்றுள்ள நிதி குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு வழங்குமாறு எஸ்.பி.ஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து, எஸ்.பி.ஐ வங்கியானது தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவலை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது. இந்நிலையில், தற்போது அந்த தகவலை இணையத்தில் பதிவேற்றம் செய்தது இந்திய தேர்தல் ஆணையம் 


யாருக்கென்ற விவரம் இல்லை:


இந்நிலையில், பதிவேற்றம் செய்யப்பட்ட தகவலில் எந்த கட்சிக்கு எந்த நிறுவனம் பணம் வழங்கியுள்ளது என்ற தகவல் இல்லை. நிறுவனங்கள் வழங்கியது குறித்து தனியாகவும், அரசியல் கட்சிகள் பணம் பெற்றது தனியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எந்த நிறுவனம், எந்த கட்சிக்கு பணம் வழங்கியது என்ற தகவல் இல்லை.




இது தொடர்பாக, எந்த நிறுவனங்கள் எவ்வளவு அளித்துள்ளன, எந்த அரசியல் கட்சிகள் எவ்வளவு பெற்றுள்ளன என்ற விரிவான தகவல்களை, இந்திய தேர்தல் ஆணையம் இணையப்பக்கத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


நாளை தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.