இந்தியாவில் 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலானது, நடைபெற்று வரும் நிலையில், இதுவரை ரூ. ரூ. 8,839 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் 2024:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், இதுவரை நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதனால், மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முறையே 66.14 சதவீதம், 66.71 சதவீதம் மற்றும் 65.68 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. நான்காம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 64 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் ( மே 21 ) நடைபெற உள்ளது.
பறக்கும் படை:
மக்களவை தேர்தலானது ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் காலங்களில் பணம் பட்டுவாடா உள்ளிட்ட செயல்பாடுகள் தடுக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மேலும், சில இடங்களில் வாகனச் சோதனையின் போதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிலநேரங்களில் வெளிநாடுகளில் இருந்தும், போதைப்பொருட்களை கடத்தி வருவதை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் பணம் பறிமுதல் குறித்தான தகவலை இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரையில் ரூ. ரூ. 8,839 கோடி மதிப்பிலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதில் ரூ. 849 கோடி பணமாக கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ரூ 814 கோடி மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், போதைப் பொருட்கள் ரூ.3,958 கோடி மதிப்பிலானவை என்றும் 1260. 33 கோடி மதிப்பிலான ஆபரணங்கள் என்றும், இதரவை ரூ. 2006 மதிப்பிலானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலிடத்தில் யார் ?:
பறிமுதல் செய்யப்பட்டதில் முதலிடத்தில் ராஜஸ்தான் உள்ளது. அங்கு ரூ. 1133 .82 கோடி மதிப்பிலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் ரூ.543 கோடி மதிப்பிலானவை தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் கட்ட தேர்தல்:
6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில், ஐந்தாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில் பீகாரைச் சேர்ந்த 5 தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த ஒரு தொகுதி, லடாக் தொகுதி, ஜார்கண்டைச் சேர்ந்த 3 தொகுதிகள், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 13 தொகுதிகள், ஒடிசாவைச் சேர்ந்த 5 தொகுதிகள், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 14 தொகுதிகள் மற்றும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.