மஞ்சள் தலைப்பாகை அணிந்த நபரை ஒரு கும்பல் தாக்கும் வீடியோ சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பஞ்சாப் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பகவந்த் மன் மீது பொதுவெளியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக வீடியோவைப் பகிர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த தகவல் பொய்யானது என்பதை கண்டறிந்தோம்.
ஜம்முவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் யுவ ஜட் சபாவின் தலைவரை பொதுமக்கள் தாக்குவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 42 நொடி நீளமான வீடியோவை எக்ஸ் மற்றும் ஃபேஸ்புக் பயன்கள் சிலர் பகிர்ந்தனர். "பொதுமக்களால் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தாக்கப்பட்டார்" என்று அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
உண்மை என்ன?
வைரல் வீடியோவின் சில காட்சிகளை ஆய்வு (reverse image) செய்து பார்த்தோம். ஆய்வு செய்ததில் கடந்த 2024ஆம் ஆண்டு, ஏப்ரல் 13ஆம் தேதி, JKROZANANEWS என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ ஒன்று கிடைத்தது. அந்த வீடியோ பதிவில், "ஜம்முவில் யுவ ஜட் சபாவின் தலைவர் அமன்தீப் சிங் போபராய், அந்த அமைப்பின் பேரணியின் போது தாக்கப்பட்டார்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே செய்தியை JK Channel வெளியிட்டிருந்தது. ஜம்முவில் உள்ள கோல் குஜ்ரால் பகுதியில் யுவ ஜாட் சபா தலைவர் அமன்தீப் சிங் போபராய் தாக்கப்பட்டார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
போப்பராயின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலேயே இந்த சம்பவத்தை விவரித்து, வீடியோ ஒன்று நேரலையாக ஒளிபரப்பப்பட்டதை கண்டோம். கடந்த 2024ஆம் ஆண்டு, ஏப்ரல் 13ஆம் தேதி, ஜாட் தினப் பேரணியின் போது, சிலர் தன்னைத் தாக்கியதாக அதில் அவர் கூறினார்.
தங்கள் பேரணியில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக யுவ ஜட் சபாவின் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து போபராயும் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலே பாகிஸ்தானின் சதி என அவர்கள் குற்றம்சாட்டினர்.
ஜம்மு சம்வாத் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் போபராய் இந்த சம்பவம் குறித்து விவாதித்துள்ளார். ஜம்மு சம்வாத் செய்தி நிறுவனத்தை தொடர்பு கொண்டோம். ஜம்முவின் கோல் குஜ்ராலில் யுவ ஜாட் சபா தலைவர் அமன்தீப் சிங் போபராய் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ காட்சிகளை அவர்கள் உறுதி செய்தனர்.
முடிவு:
யுவ ஜாட் சபா தலைவர் அமன்தீப் சிங் போபராய் மீது தாக்கப்பட்ட காட்சிகளை பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மீது தாக்கப்பட்டதாக செய்தி பரப்பப்பட்டது இதன் மூலம் தெளிவாகிறது.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக newschecker என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே திருத்தி எழுததியுள்ளது.