Lok Sabha Election Phase 5 Polling: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் ஐந்தாம் கட்டத்தில், 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு:

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதனால், மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முறையே 66.14 சதவீதம், 66.71 சதவீதம் மற்றும் 65.68 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. நான்காம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 64 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

49 தொகுதிகளில் வாக்குப்பதிவு?

6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில், ஐந்தாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில் பீகாரைச் சேர்ந்த 5 தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த ஒரு தொகுதி, லடாக் தொகுதி, ஜார்கண்டைச் சேர்ந்த 3 தொகுதிகள், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 13 தொகுதிகள், ஒடிசாவைச் சேர்ந்த 5 தொகுதிகள், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 14 தொகுதிகள் மற்றும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

தொகுதி விவரங்கள்:

மாநிலம்/யூ.டி தொகுதிகள்
பீகார் சீதாமர்ஹி, மதுபானி, முசாபர்பூர், சரண், ஹாஜிபூர் (SC)
ஜம்மு & காஷ்மீர் பாரமுல்லா
லடாக் லடாக்
மகாராஷ்டிரா துலே, டிண்டோரி, நாசிக், கல்யாண், பால்கர், பிவாண்டி, தானே, மும்பை வடக்கு, மும்பை வடமேற்கு, மும்பை வடகிழக்கு, மும்பை வட-மத்திய, மும்பை தெற்கு-மத்திய, மும்பை தெற்கு
ஒடிசா பர்கர், சுந்தர்கர், போலங்கிர், கந்தமால், அஸ்கா
உத்தரப்பிரதேசம் மோகன்லால்கஞ்ச் (SC), லக்னோ, அமேதி, ரேபரேலி, ஜலான், ஜான்சி, ஹமிர்பூர், பண்டா, கௌசாம்பி (SC), பாரபங்கி (SC), பைசாபாத், கைசர்கஞ்ச், கோண்டா
மேற்கு வங்காளம் பங்கான், பாரக்பூர், ஹவுரா, உலுபெரியா, ஸ்ரீராம்பூர், ஹூக்ளி, ஆரம்பாக்
ஜார்கண்ட் சத்ரா, கோடர்மா, ஹசாரிபாக்

இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை:

வாக்குப்பதிவை முன்னிட்டு மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை அனல் பறக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டு ஊடுருவல்காரர்களுக்கு வழங்கப்படும் எனவும், உத்தரபிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்ட் வருகிறார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் எனவும், மதச்சார்பற்ற நாடு என்ற அடையாளம் இந்தியாவிற்கு இருக்காது எனவும் காங்கிரஸ் கட்சி களமாடி வருகிறது. முதல் நான்கு கட்டங்களை காட்டிலும், ஐந்தாம் கட்டத்தில் இரண்டு பிரதான தேசிய கட்சிகள் இடையேயான கருத்து மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித் ஷா மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் இன்று பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட உள்ளனர்.

நட்சத்திர வேட்பாளர்கள்:

 உத்திரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் காங்கிரஸின் கே.எல்.சர்மா போட்டியிடுகின்றனர்.  ராகுல் காந்தி ரேபரேலியில் களம் காண்கிறார். லக்னோவில் இருந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகாரில் இருந்து லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக அறியப்படுகின்றனர். மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் கல்யாணைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீகாந்த் ஷிண்டே, மும்பை வடக்கிலிருந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மூத்த வழக்கறிஞர் உஜ்வல் நிகம் மற்றும் மும்பை வடமத்தியத்தில் மும்பை பிராந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வர்ஷா கெய்க்வாட் போட்டியிடுகின்றனர்.