மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சோதனை நடவடிக்கைகளின் போது தேர்தல் ஆணையம் 558 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளது.


அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்:


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. ஜார்க்கண்டில் இரண்டு கட்டமாக நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதியும் மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.


அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேபோல, கனிமங்கள் அதிகம் உள்ள மாநிலமாக ஜார்க்கண்ட் உள்ளது. 


மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத்  தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் தீவிர வாகன சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் இதுவரை ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 558 கோடி மதிப்புள்ள ரொக்கம், இலவசங்கள், மதுபானங்கள், மருந்துகள், விலை உயர்ந்த ஆபரணங்கள் போன்றவற்றை தேர்தல் ஆணையத்தின் கீழ் உள்ள அமைப்புகள் பறிமுதல் செய்துள்ளன.


கோடிக்கணக்கில் சிக்கிய பணம்:


இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை, ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் 280 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜார்க்கண்டில் இதுவரை ரூ.158 கோடி மதிப்புள்ள ரொக்கமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


 






மகாராஷ்டிராவில் 37.76 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களும் ஜார்க்கண்டில் 8.99 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 


2019-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுடன் ஒப்பிடும்போது மகாராஷ்டிராவில் தற்போது ரூ.103.61 கோடியும், ஜார்க்கண்டில் ரூ.18.76 கோடியும் அதிக தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


இதையும் படிக்க: US Election Results 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - வெற்றி கொடிநாட்டிய இந்தியர்கள், யார்? எங்கு என தெரியுமா?