கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு:


கோவை சிறை மைதானத்தில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.133 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என, கோவையில் இரண்டு நாட்களாக முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார்.


அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்:


அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் உடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.  சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது, கட்சிப்பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தவெக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்படலம் என கூறப்படுகிறது.


திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு:


11ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனைக் கண்டறிவதற்காக, அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்திய தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதில் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை ஒரு கல்வியாண்டிற்கு மாதம் ₹1,000 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது.


சாதிவாரி கணக்கெடுப்பு:


நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. நாட்டில் அரசியல் முதல் நீதித்துறை வரை சாதி பரவி இருப்பதாகவும் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.


புல்லட் ரயில் கட்டுமான பணி விபத்து - 3 பேர் பலி


ஆனந்த் மாவட்டத்தில் வதோதரா நகரருகே வசாத் கிராமத்தில் மும்பை-ஆமதாபாத் புல்லட் ரெயில் வழித்தடத்திற்கான கட்டுமான பணி நடந்து வந்தது.கட்டுமானம் நடைபெறும் மாஹி ஆற்றையொட்டிய பகுதியில் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு இருந்தது.இது நேற்று திடீரென சரிந்து விழுந்ததில் 3 தொழிலாலர்கள் உயிரிழந்தனர்.


லோக் ஆயுக்தா முன்பு ஆஜராகிறார் முதலமைச்சர்


நிலமுறைகேடு புகாரில் சிக்கியுள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, இன்று லோக் ஆயுக்தா முன்பு விசாரணைக்கு ஆஜராகிறார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அமெரிக்க அதிபர் தேர்தல் - கடும் இழுபறி


அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய சூழலில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 230 பிரதிநிதி வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அதேநேரம், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் 205 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னேறி வருகிறார். இதனால், வெற்றியாளரை உறுதி செய்வதில் கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் இடையே கடும்  இழுபறி நீடித்து வருகிறது.


இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் மாற்றம்:


போர் சூழலுக்கு மத்தியில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரை மாற்றி அந்நாட்டு பிரதமர் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, யோவ் கேலண்ட் நீக்கப்பட்டு வெளியுறவு அமைச்சராக இருந்த காட்ஸ் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் மீதான தாக்குதல் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.


ஐபிஎல் ஏலம் தேதி அறிவிப்பு


2025ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான வீரர்களின் ஏலம் வரும் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில், சவுதி அரேபியாவின் ஜெடா நகரில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 1,574 வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்க தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில் 1165 இந்திய வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். இந்த ஏலத்தில் 204 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.


ஐபிஎல் ஏலத்தில் ஆண்டர்சன்


இங்கிலாந்து முன்னாள் வீரரும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார். 42 வயதான அவரது அடிப்படை விலை ரூ.1.15 கோடியாக நிர்ணயம். அவர் டி20 போட்டியில் கடைசியாக 2014ல் விளையாடியுள்ளார். சென்னை அணி இவரை குறிவைக்கும் என எதிர்பார்ப்பு.