ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க போதுமான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. புதியதாக வாக்களிக்க தகுதி பெற்ற நபர்கள் மற்றும் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை திருத்திக் கொள்வதற்கு ஏதுவாக வாக்காளர் சிறப்பு முகாம்களை அவ்வப்போது தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.


வாக்காளர் சிறப்பு முகாம்:


கடந்த வாரம் அதற்காக வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழவதும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களான இன்று மற்றும் நாளை பெரும்பாலான மக்களுக்கு விடுமுறை என்பதால் அவர்களின் வசதிக்காக இந்த இரண்டு நாட்கள் நடத்தப்பட உள்ளது.


இந்த முகாமில் புதியதாக வாக்காளர் அட்டை பெற விரும்பும் நபர்கள், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு திருத்த நடவடிக்கைகளை செய்ய விரும்பும் மக்கள் இந்த இரண்டு நாட்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.


68 ஆயிரம் வாக்குச்சாவடி:


இன்றும், நாளையும் நடைபெறும் இந்த வாக்காளர் சிறப்பு முகாம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது. பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு நாள் சிறப்பு முகாமில் தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 42 ஆயிரத்து 35 பேர் தங்களது புதியதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலை  பெயரை நீக்க 44 ஆயிரத்து 128 பேரும், தங்களது குடியிருப்பை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்ற  அல்லது தொகுதிக்குள்ளே வேறு ஒரு முகவரிக்கு மாற்ற 1 லட்சத்து 98 ஆயிரத்து 931 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.


வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை சேர்க்க 419 பேர் விண்ணப்பித்து இருந்தனர் கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு நாள் முகாமில் மொத்தமாக 6 லட்சத்து 85 ஆயிரத்து 513 பேர் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் உள்ளிட்ட காரணங்களுக்காக விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாமில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கிக் கொள்ளவும் அவர்களது குடும்பத்தினருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.