Wayanad Bypoll 2024: வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டுள்ளதால், அந்த தொகுதி முடிவுகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


15 மாநிலங்களில் இடைத்தேர்தல்


நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. கடந்த சில வாரங்களாக, அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மேகாலயா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 14 மாநிலங்களில் உள்ள 48 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. கேரளாவின் வயநாடு மற்றும் மகாராஷ்டிராவின் நான்டெட் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.



எதிர்பார்ப்பில் வயநாடு இடைத்தேர்தல் முடிவு:


இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில், ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி முதல்முறையாக நேரடியாக மக்கள் பிரதிநிதி பதவிக்காக போட்டியிட்டுள்ளார். முன்னதாக கடந்த பொதுத்தேர்தலின் போது வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றாஎ.  இரண்டாவது தொகுதியை தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்ததை அடுத்து, வயநாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின் போது, அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வியுற்றபோது, வயநாடு தொகுதிதான் ராகுல் காந்திக்கு வெற்றியை பரிசளித்து நாடாளுமன்றத்திற்கு செல்ல வாய்ப்பளித்தது. அதேபாணியில் வயநாடு பிரியங்கா காந்திக்கு வெற்றியை பரிசளிக்குமா என்பது காங்கிரசாரின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. அப்படி நடந்தால், காந்தி குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாவது இதுவே முதல்முறையாகும்.


இதையும் படிங்க - Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?


50 தொகுதிகளில் இடைத்தேர்தல்:


தேர்தல் ஆணைய தரவுகளின்படி, உத்தரப்பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, கேரளா, உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ம்ாற்றும் சிக்கிம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 48 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ராஜஸ்தானில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மேற்குவங்கத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்தது அல்லது உயிரிழந்தன் காரணமாக இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.