மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ள நிலையில், கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் அம்மாநிலத்திற்கு கூடுதலாக 10,000 ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளது மத்திய அரசு.
மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்:
கடந்த வாரம், ஜிரிபாம் மாவட்டத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டது, மணிப்பூரில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது, பாஜகவை சேர்ந்த மூன்று அமைச்சர்கள் மற்றும் ஆறு எம்.எல்.ஏ.க்களின் வீடுகளை போராட்டக்காரர்கள் தாக்கியதால் மீண்டும் கலவரம் வெடித்தது.
முதலமைச்சர் பிரைன் சிங்கின் தனிப்பட்ட இல்லத்திலும் நுழைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவரது மருமகனும் பாஜக எம்எல்ஏவுமான ராஜ்குமார் இமோ சிங், எம்எல்ஏக்கள் ரகுமணி சிங், சபம் குஞ்சகேஸ்வரர் மற்றும் சபம் நிஷிகாந்தா ஆகியோரின் வீடுகள் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.
ராஜ்குமாரின் இல்லம் முன்பு திரண்ட போராட்டக்காரர்கள், 3 பேர் கொல்லப்பட்ட விவகாரத்டில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆறு எம்.எல்.ஏ.க்களில் மூன்று பேரின் வீடுகளை சூறையாடி அவர்களின் சொத்துக்களுக்கு தீ வைத்தனர், இம்பாலின் பல்வேறு பகுதிகளில் அவர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதனால் அந்த பகுதிகள் போர்க்களமாக காட்சியளித்தன. இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் சபம் ரஞ்சன் லாம்பெல் சனகீதெலின் இல்லத்தை ஒரு கும்பல் தாக்கியது. அப்போது, 3 பேர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், பொதுப் பிரச்னைகளுக்கு அரசு தீர்வு காணத் தவறினால் பதவி விலகுவதாகவும் அவர் போராட்டக்காரர்களிடம் உறுதியளித்தார்.
இந்த நிலையில், மணிப்பூரில் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் அங்கு கூடுதலாக 10,000 ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்ப உள்ளது. இதன் மூலம், மணிப்பூரில் குவிக்கப்பட உள்ள மத்திய ஆயுத படைகளின் எண்ணிக்கை 288ஆக உயர உள்ளது.
இம்பாலில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசிய மணிப்பூர் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங், "90 படைகளைப் பெற இருக்கிறோம். அதில், கணிசமான பகுதி ஏற்கனவே இம்பாலை அடைந்துவிட்டது.
பொதுமக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்கும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை கண்காணிப்பதற்கும் நாங்கள் படைகளை அனுப்பி வருகிறோம். 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூர் வன்முறையில் சிக்கி 258 பேர் இறந்துள்ளனர்" என்றார்.