மகாராஷ்டிர அரசியலில் பல திருப்பங்களுக்கு இடையே, மாநிலத்தின் முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுள்ளார்.




முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பார் என்று எதிர்பார்த்த நிலையில், ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்பார் முன்னாள் முதலமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.


அரசில் அங்கம் வகிக்க மாட்டேன் என்றும் அது சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வேன் என்று தெரிவித்த பட்னாவிஸ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். இது மகாராஷ்ட்ர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




இதையடுத்து பிரதமர் மோடி, பட்னாவிஸ், பாஜக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே, "அது அவர்களின் பெருந்தன்மை. அவர்களுக்கு பெரிய மக்கள் ஆதரவு இருந்தும் என்னை முதலமைச்சராக்கினார்கள். யார் இப்படி செய்வார்கள்" என்றார். தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து மதியம் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.


மகாராஷ்ட்ராவில் ஆட்சியில் இருந்த சிவசேனா கூட்டணி மீது அதிருப்தி ஏற்பட்டதால், சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கினர். அவர்களை சமாதானப்படுத்த மேற்கொண்ட உத்தவ்தாக்கரே மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.


இதையடுத்து, நேற்று இரவு முதல்வர் பதவியை உத்தவ்தாக்கரே ராஜினாமா செய்தார். மகாராஷ்ட்ராவில் ஆட்சியை அமைப்பது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டேவும், முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் தீவிர ஆலோசனை நடத்தினர். இதனால், மூன்றாவது முறையாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை ஏற்பார் என்று தகவல்கள் வெளியாகியது.





இந்த சூழலில், இன்று மாலையில் ஆளுநர் பகத்சிங் கேஷ்யாரியை ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த தேவேந்திர பட்னாவிஸ், “ உத்தவ் தாக்கரேவின் செயல்பாடுகள் பால்தாக்கரேவின் கொள்கைகளுக்கு எதிராக இருந்தது. 2019ல் பா.ஜ.க. ஆட்சி அமைவதையே மக்கள் விரும்பினர். சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவரது அமைச்சரவையில் பா.ஜ.க. இடம்பெறும். அமைச்சரவையில் நான் இடம்பெறமாட்டேன்.” எனத் தெரிவித்திருந்தார். 


ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பு ஏற்பது அவரது ஆதரவாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பதவியேற்பு இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.


கோவா விடுதியில் தங்கியிருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள், இச்செய்தியினை அங்கு வைக்கப்பட்ட பெரிய திரையில் கண்டதும் நடனமாட தொடங்கினர். சிலர் மேஜைகளில் கூட ஏறி கூட டான்ஸ் செய்தனர்.