மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாள்களாகியும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் தொடர் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. மீண்டும் முதலமைச்சராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே விரும்புவதாகவும் அதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து அவரை விளக்கம் அளித்துள்ளார்.


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அங்கு, பாஜக தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றியை பதிவு செய்தது.


உருக்கமாக பேசிய ஷிண்டே:


கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மொத்தம் 234 தொகுதிகளில் வென்று, சாதனை படைத்தது. பாஜக மட்டும் 132 இடங்களை கைப்பற்றியது. சிவசேனா 57 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.


இதன் மூலம், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. முடிவுகள் வெளியாகி நான்கு நாள்களாகியும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் தொடர் சஸ்பென்ஸ் நிலவி வருகிறது. பாஜகவை சேர்ந்தவரும் முன்னாள் முதலமைச்சருமான பட்னாவிஸை முதலமைச்சராக்க அக்கட்சி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.


ஆனால், முதலமைச்சர் பதவி தனக்கே தரப்பட வேண்டும் என தற்போதைய முதலமைச்சரும் சிவசேனா கட்சியின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே கேட்டு வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இன்றைய செய்தியாள்கள் சந்திப்பில் முதலமைச்சர் பதவி குறித்து அனைத்து ஊகங்களுக்கும் ஏக்நாத் ஷிண்டே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்?


ஆட்சி அமைக்க தடையாக இருக்க மாட்டேன் என கூறிய அவர், "கடந்த 2-4 நாட்களாக யாரோ ஒருவர் கோபமாக இருப்பதாக வதந்திகள் வெளியானது. அதை, நீங்கள் பார்த்திருப்பீர்கள். நாங்கள் கோபப்படுபவர்கள் அல்ல. நான் நேற்று பிரதமருடன் பேசி, (மகாராஷ்டிராவில்) ஆட்சி அமைப்பதில் நாங்கள் தடையாக இருக்க மாட்டோம் என்று கூறினேன்.


நீங்கள் ஒரு முடிவு எடுங்கள். பாஜகவின் முடிவே இறுதியானது. பாஜக கூட்டணிக்கு தலைவர் யார்? பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா. எனவே, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் எங்கள் முடிவில் இருந்து எந்தப் பிரச்னையும் இல்லை என்று இருவரையும் அழைத்துப் பேசினேன்.


நீங்கள் முடிவு எடுங்கள். அந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். முதல்வர் பதவி தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அவருக்கு சிவசேனா முழு ஆதரவு அளிக்கும்" என்றார்.