மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாள்களாகியும், அடுத்த முதலமைச்சர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ், இதுகுறித்து பதில் அளித்துள்ளார்.


ஜம்மு காஷ்மீர், ஹரியானாவை தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.  ஜார்க்கண்டில் படுதோல்வி அடைந்த போதிலும், மகாாஷ்டிராவில் பாஜக கூட்டணி பெரும் வெற்றியை பதிவு செய்தது.


மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்?


கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மொத்தம் 234 தொகுதிகளில் வென்று, சாதனை படைத்தது. பாஜக மட்டும் 132 இடங்களை கைப்பற்றியது. சிவசேனா 57 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.


இதன் மூலம், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. முடிவுகள் வெளியாகி நான்கு நாள்களாகியும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் தொடர் சஸ்பென்ஸ் நிலவி வருகிறது. பாஜகவை சேர்ந்தவரும் முன்னாள் முதலமைச்சருமான பட்னாவிஸை முதலமைச்சராக்க அக்கட்சி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.


ஆனால், முதலமைச்சர் பதவி தனக்கே தரப்பட வேண்டும் என தற்போதைய முதலமைச்சரும் சிவசேனா கட்சியின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.


தேவேந்திர பட்னாவிஸ் பரபர பதில்:


இந்த நிலையில், முதலமைச்சர் பதவி தொடர்பாக கூட்டணி கட்சிகள் இணைந்து முடிவெடுத்து வருவதாகவும் அதற்கான விடை விரைவில் கிடைக்கும் என்றும் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு இடையே நிலவும் வேறுபாடுகளை களைய பாஜக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.


"ஆட்சி அமைக்க அவசரப்படவில்லை. ஆட்சி அமைக்க எந்த காலக்கெடுவையும் விதிக்கவில்லை. உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைக்க இரண்டு வாரங்கள் ஆனது" என பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


முதல்வர் பதவியைத் தவிர, பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே அமைச்சர் பதவிகள் குறித்து உடன்பாடு எட்டப்பட வேண்டும். மகாராஷ்டிராவில் முதல்வர் உட்பட மொத்தம் 43 அமைச்சர்கள் பதவியேற்று கொள்ளலாம். இதில், பாதிக்கும் மேற்பட்ட அமைச்சர் பதவிகள் பாஜகவுக்கும் மீதமுள்ளவை கூட்டணி கட்சிகளுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.