Adani Green Energy Refutes: அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் மீதான லஞ்சப் புகாரை மறுத்து அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


லஞ்சப் புகாருக்கு அதானி நிறுவனம் மறுப்பு:


சோலார் எனர்ஜி திட்டத்தை கைப்பற்றுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு, ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும்  மூத்த நிர்வாகி வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்க நீதித்துறையின் கீழ் லஞ்சம் கொடுத்ததாக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று தெரிவித்துள்ளது. அதேநேரம், குற்றப்பத்திரிகையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, உத்தரவாத மோசடி மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை தங்கள் தரப்பினர் எதிர்கொள்கின்றனர் என்பதை நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.



அதானி மீதான குற்றச்சாட்டுகள் என்ன?


அதானி கிரீன் எனர்ஜி வெளியிட்டுள்ள ஒழுங்குமுறை தாக்கல் ஒன்றில், குற்றச்சாட்டுகள் நிதி மற்றும் உத்தரவாத மோசடிகளை உள்ளடக்கியிருந்தாலும், லஞ்சம் அல்லது வெளிநாட்டு ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது. அதன்படி,  "எங்கள் இயக்குநனர்கள் கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை (எஃப்சிபிஏ) மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறும் ஊடகக் கட்டுரைகள் தவறானவை" என்று விளக்கமளித்துள்ளது.


உத்தரவாத மோசடி சதி, நிதி மோசடி மற்றும் உத்தரவாத மோசடியை உள்ளடக்கிய 5 குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித் துறையின் குற்றப்பத்திரிகையில் எதிர்கொள்ளும் கவுதம் அதானி, சாகர் அதானி அல்லது வினீத் ஜெயின் ஆகியோர் "நீதியைத் தடுக்கும் சதி"யில் இடம்பெறவில்லை என்று நிறுவனம் விளக்கியுள்ளது. 


யார் மீது லஞ்சப் புகார்?


ரஞ்சித் குப்தா, சிரில் கபேன்ஸ், சௌரப் அகர்வால், தீபக் மல்ஹோத்ரா மற்றும் ரூபேஷ் அகர்வால் உள்ளிட்ட கனேடிய நிறுவன முதலீட்டாளரான அஸூர் பவர் மற்றும் CDPQ உடன் தொடர்புடைய தனிநபர்கள் ஆகியோர் மட்டுமே லஞ்ச குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகளில் அதானி நிர்வாகிகள் யாரும் பெயரிடப்படவில்லை.


முன்னதாக, குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டதைத் தொடர்ந்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் அதானி குழுமம் குற்றச்சாட்டுகளை மறுத்தது. மேலும்,  "அதானி கிரீன் இயக்குநர்கள் மீது அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அவை திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளன" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.