பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் நடந்த கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி-லக்னோ நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இந்த விபத்து நடந்துள்ளது.


ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு:


இதுகுறித்து பூல்பூர் காவல்நிலைய பொறுப்பாளர் தீபக் ரனாவத் கூறுகையில், "இந்த விபத்தில் ஒன்பது வயது சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். 


பூல்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கார்கியாவ் பகுதியில், டிரக் மீது எஸ்யூவி கார்  மோதியதில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர், எஸ்யூவி ஓட்டுநர், மற்றுமொருவர் உயிரிழந்தனர்.


விபின் யாதவ் (32), அவரது தாயார் கங்காதேவி (48), மகேந்திர பால் (43), அவரது மனைவி சந்திரகாளி (40), சகோதரர் தாமோதர் பிரசாத் (35), அவரது மனைவி நிர்மலா தேவி (32), ராஜேந்திரா (55), டிரைவர் ஆனந்த் (24) ஆகியோர் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.


பிலிபித் மாவட்டத்தைச் சேர்ந்த அவர்கள் வாடகை டாக்ஸியில் வாரணாசிக்கு வந்துள்ளனர். அவர்கள் ஜான்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. காயமடைந்த 9 வயது சிறுவன் தாமோதர் பிரசாத்தின் மகன். 


குடும்ப உறுப்பினர் ஒருவரின் அஸ்தியை கங்கையில் கரைப்பதற்காக மகேந்திர பாலும் அவரது உறவினர்களும் வாரணாசிக்கு வந்திருந்தனர். ​​மற்றவர்கள் தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்திருந்தனர். இறந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன" என்றார்.


விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சிறுவனுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.


அதிகரிக்கும் சாலை விபத்துகள்:


இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 2021ஆம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,53,972 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3,84,448 பேர் காயம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் 3,84,448 விபத்துகளில் 1,31,714 பேர் மரணம் அடைந்தனர். 3,48,279 பேர் காயம் அடைந்தனர்.


2021-ம் ஆண்டு தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதன்படி, அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 10,000 சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. 2021-ம் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம் அடைந்தனர். இதன்படி அதிக மரணங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 5,000 மரணங்கள் அதிகரித்துள்ளது.