மத்தியக் கல்வி அமைச்சகம் சந்திரயான் 3 சாதனைகள் தொடர்பாக ‘உங்கள் சந்திரயான்’ என்ற இணையதளத்தையும் அதற்கான சிறப்பு பாடத் திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம் என மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்துள்ளார்.
  

 

முன்னதாக இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் மணிஷ் ஜோஷி அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் அனைத்துக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

விண்வெளி ஆராய்ச்சியில் மாணவர்கள் ஆர்வம்


அதில், நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு இந்தியா என்ற வகையில் சந்திரயான்- 3 வெற்றியானது, இளம் தலைமுறையினரிடம் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அறிவியல் மீதான ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. இதனால் மாணவர்கள் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பாடத் திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

இதையொட்டி, மத்தியக் கல்வி அமைச்சகம் சந்திரயான் தொடர்பான பாடத் திட்டங்கள் மற்றும் இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்த இணையதளத்தை டெல்லியில் தொடங்கி வைத்தார். இதன்மூலம் சந்திரயான் திட்டத்தை அடிப்படையாக கொண்ட பல்வேறு செயல்பாடுகளில் மாணவர்கள் பங்கேற்க முடியும். அதற்கேற்ப 10 சிறப்பு பாடத் திட்டங்கள் இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சந்திரயான் 3 குறித்த குறும்படமும் இந்த நிகழ்ச்சியில் திரை இடப்பட்டது.

 


 

அறிவியலை விளையாட்டாக மாணவர்களிடையே எடுத்துச்செல்ல வேண்டும்


இந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாணவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி ஊக்குவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு நன்றி தெரிவித்தார். டாக்டர் சோம்நாத் நாட்டின் குழந்தைகளுக்கு சந்திரயான் 3 கதைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அறிவியலை விளையாட்டாக மாணவர்களிடையே எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இந்த நிலையில், ’’கல்வி அமைச்சர் தொடங்கி வைத்த ‘உங்கள் சந்திரயான்’ இணையதளம் குறித்தும், அதன் சிறப்பு பாடத்திட்டங்கள் தொடர்பாகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உயர் கல்வி நிறுவனங்கள் தெரியப்படுத்த வேண்டும். அதன்மூலம் ஆர்வமுள்ள மாணவர்கள் வினாடி வினா, குறும்படம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும்’’ என யுஜிசி என்று அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

 

கூடுதல் தகவல்களுக்கு: https://bharatonthemoon.ncert.gov.in/login என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.