கேரள மாநிலம் இடுக்கி அருகே அடிமாலியில் கடந்த ஆகஸ்டு 12-ம் தேதி காணாமல் போனதாக கூறப்பட்ட சிந்து என்ற 45 வயது பெண் காணாமல் போனதாக கூறப்பட்ட பெண் அவர் தங்கி இருந்த வீட்டில் கொன்று புதைக்கப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


காமாக்‌ஷி பகுதியை சேர்ந்த சிந்துவுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளன. இந்த நிலையில், தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு தனது வீட்டை விட்டு இளைய மகனை அழைத்து சென்று உள்ளார் சிந்து.


இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே பனிகங்குடியில் மனிகுன்னெல் பினாய் (வயது 52) என்பவருக்கு சொந்தமான வீட்டில் கணவரை பிரிந்து கடந்த 5 ஆண்டுகளாக வாடகைக்கு தங்கி இருந்து உள்ளார். பினாய் வீடும் சிந்து தங்கி இருக்கும் வீட்டுக்கு அருகாமையில் உள்ளது. இந்த நிலையில், ஆகஸ்ட் 12-ம் தேதி சிந்து காணாமல் போனார். இது குறித்து வெல்லத்தூவல் காவல் நிலையத்தில் புகாரளித்த அவரது தாய், உறவினர்களுடன் ஊர் முழுவதும் தேடி அலைந்தனர். மறுபுறம் போலீசும் வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.


இந்த நிலையில், சிந்துவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் உரிமையாளர் பினாயிடம் சிந்து குறித்து அவரது உறவினர்கள் விசாரிக்க சென்றபோது அவரும் வெள்ளிக்கிழமை முதல் மாயமானதும், தாயுடன் வசித்த இளைய மகனை பினோய் கடந்த ஆகஸ்டு 11-ம் தேதி தனது சகோதரர் வீட்டுக்கு அனுப்பியதும் தெரியவந்தது.



இதனை அடுத்து அவரது வீடு முழுவதும் சோதனையிட்ட உறவினர்கள், சமையலறையில் மாற்றம் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்தனர். உடனே சமையலறையின் தரைப்பகுதியை தோண்டியபோது 2 அடி ஆழத்தில் 4 விரல்கள் தெரிந்ததை கண்டு திடுக்கிட்ட உறவினர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.


இதனை தொடர்ந்து இன்று காலை தடயவியல் நிபுணர்களுடன் 6 அடி ஆழமுள்ள குழியை தோண்டினர். அதில் இறந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அது சிந்துவின் உடல்தான் என்று அவரது மகன் உறுதி செய்துள்ளார். காவல்துறை மோப்ப நாயிடம் சிக்காமல் இருக்க சிந்துவின் உடலுடன் குழி முழுவதும் மிளகாய்த்தூள் கொட்டப்பட்டு இருந்தது.


கடந்த ஆகஸ்டு 11-ம் தேதி தனது தந்தையுடன் வசித்து வரும் மகளையும் தன்னுடன் வந்து இருக்க அழைத்தார் என்றும், கடைசியாக சிந்துவுடன் இருந்த தொடர்பு அதுதான் எனவும் போலீசிடம் தெரிவித்து உள்ளனர். சிந்துவை கொன்று சமையலறையில் புதைத்துவிட்டு அந்த தடயம் தெரியாமல், அதை பினோய் அழித்துவிட்டு பொறுமையாக தப்பிச்சென்றுள்ளார். அவரை தீவிரமாக தேடி வரும் போலீசார், கைதுக்கு பின் உண்மை நிலவரம் தெரியவரும் என நம்புகின்றனர்.